திறமையுள்ள மலாய்-அல்லாத மாணவர்களுக்கு மெட்ரிக்குலேசனில் இடம் உறுதி: பிரதமர்

கோலாலம்பூர்:

கல்வியில் மிகச் சிறந்து விளங்கும் ‘பூமிபுத்திராக்கள்’ அல்லாத மாணவர்களுக்கு மெட்ரிக்குலேஷனில் சேர உறுதியளிக்கும் அரசாங்கத்தின் திட்டம் ‘அர்த்தமற்றது’ என்று சிலர் விமர்சித்துள்ளனர்.

இது நாட்டின் கல்வி முறையில் இன ரீதியான இட ஒதுக்கீடு குறித்த விவகாரத்திற்கு அது சரியான தீர்வை அளிக்கவில்லை என்று அவர்கள் கூறுகின்றனர்.

‘SPM’ பொதுத் தேர்வில் 10 அல்லது அதற்கு மேற்பட்ட ‘A’ தேர்ச்சி பெறும் அனைத்து மாணவர்களும் இனப் பாகுபாடின்றி மெட்ரிக்குலேஷனில் இனி சேரலாம் என்று அரசாங்கம் கூறியுள்ளது.

இந்த மெட்ரிக்குலேஷனில் தேர்ச்சி பெறுவோர், மலேசியாவின் பொதுப் பல்கலைக்கழகங்களில் உறுதியாகச் சேர இயலும்.

தனியார்ப் பல்கலைக்கழகங்களிலோ வெளிநாட்டுக்கு அனுப்பியோ பிள்ளைகளைப் படிக்க வைப்பதைவிட பெற்றோர்க்கு இது செலவைக் குறைக்கும்.

“பிள்ளைகள் 10 அல்லது அதற்கு மேற்பட்ட ‘A’ தேர்ச்சிக் குறியீடு பெற்றிருந்தாலோ சிறப்புத் தேர்ச்சி பெற்றிருந்தாலோ அவர்களுக்குக் கட்டாயம் இடம் கிடைக்கும். இதற்கு அரசாங்கம் அளிக்கும் உறுதி,” என்று பிரதமர் கடந்த ஜூன் 30ஆம் தேதி கூறினார்.

“பிள்ளைகளின் வாய்ப்புகளை உறுதிசெய்ய, கூடுதலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்னும் உண்மையை ஒப்புக்கொள்வதில் அமைச்சு, தனியார் துறை, அரசு சாரா அமைப்புகள், கல்விமான்கள், கல்வித்துறை என அனைத்துத் தரப்புகளும் முன்வர வேண்டும்.

“இது ஒரு பிரச்சினையைத் தீர்க்க உதவும் என்று நம்புகிறோம். இது ஓர் இன ரீதியான விவகாரமாகத் தொடரக்கூடாது என்று கருதுகிறோம்,” என்று தஅன்வார் கூறினார்.

மலேசிய மெட்ரிக்குலேஷனில் கல்லூரிகளில் உள்ள 40,000 இடங்களில் 90 விழுக்காடு ‘பூமிபுத்திராக்கள்’ எனப்படும் மலாய் மாணவர்களுக்காக ஒதுக்கப்படுகின்றன. எஞ்சியுள்ள 10 விழுக்காட்டு இடங்களுக்கு மட்டுமே சீன, இந்திய இனங்களைச் சேர்ந்த மாணவர்கள் தகுதிபெறுவர்.

மலேசியாவில் 1971ஆம் ஆண்டு அறிமுகமான இட ஒதுக்கீட்டு நடைமுறை, அரசாங்க வேலைகள், வீடமைப்பு, பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை ஆகியவற்றில் பூமிபுத்திரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here