ராகுல் காந்தி பேச்சுக்கு எதிர்ப்பு: பாஜக – காங்கிரஸ் தொண்டர்கள் இடையே மோதல்

மக்களவையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் பாஜகவினர் போராட்டம் நடத்தினர். அப்போது பாஜக – காங்கிரஸ் தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டது.

மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி, கடந்த திங்கள்கிழமை தனது முதல் உரையாற்றியபோது, பாஜக மற்றும் பிரதமர் மோடி மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். அவரது பேச்சின் சில பகுதிகளை அவை குறிப்பிலிருந்து சபாநாயகர் நீக்கினார். இந்நிலையில் ராகுல் காந்தி, இந்து விரோத கருத்துகளை தெரிவித்ததாக கூறி, நாடு முழுவதும் பாஜகவினர் கடும் எதிர்ப்புகளையும், கண்டனங்களையும் தெரிவித்தனர்.

இந்நிலையில், குஜராத் காங்கிரஸ் தலைமை அலுவலகத்துக்கு வெளியே நேற்று, பாஜக இளைஞரணி அமைப்பான பாரதிய யுவ ஜனதா மோர்ச்சா (பிஜேஒய்எம்), காங்கிரஸ் தொண்டர்கள் ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசி தாக்கிக் கொண்டனர்.

பஜ்ரங் தள் மற்றும் விசுவ ஹிந்து பரிஷத் தொண்டர்களும் இந்த தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் தங்கள் தொண்டர்கள் காயமடைந்ததாக இரு தரப்பினருமே தெரிவித்தனர்.

இதற்கிடையே இந்த தாக்குதல் சம்பவத்துக்கு ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், “குஜராத் காங்கிரஸ் அலுவலகம் மீது நடத்தப்பட்ட கோழைத்தனமான வன்முறைத் தாக்குதல், பாஜக மற்றும் சங் பரிவார் பற்றிய எனது கருத்தை மேலும் வலுப்படுத்துகிறது.

வன்முறையையும் வெறுப்பையும் பரப்பும் பாஜகவினர் இந்து மதத்தின் அடிப்படைக் கொள்கைகளைப் புரிந்து கொள்ளவில்லை. பாஜகவினர் கூறும் பொய்களை குஜராத் மக்கள் தெளிவாக புரிந்து கொள்ள முடியும். பாஜக அரசுக்கு அவர்கள் உறுதியாக பாடம் புகட்டுவார்கள். நான் மீண்டும் சொல்கிறேன்…குஜராத்தில் இந்தியா கூட்டணி தான் வெற்றி பெறப் போகிறது” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here