இந்திய முதலீடு: திடீரென தொடர்பை நிறுத்திய டெஸ்லா

புதுடில்லி:

எலான் மஸ்க்கின் ‘டெஸ்லா’ நிறுவனம் இந்தியாவில் தொழிற்சாலை துவங்க திட்டமிட்டு வந்த நிலையில், அந்நிறுவன அதிகாரிகள் இதற்கான முயற்சிகளை தொடராததால், டெஸ்லா இந்திய சந்தையில் நுழைவது தற்போது கேள்விக்கு உள்ளாகியுள்ளது.

மின்சார கார் தயாரிப்பில், உலகின் முன்னணி நிறுவனமாக எலான் மஸ்கின் டெஸ்லா விளங்குகிறது. சீனாவில் அந்நிறுவனத்திற்கு கார் தயாரிக்கும் ஆலை உள்ள நிலையில், இந்தியாவிலும் ஆலை துவங்க திட்டமிட்டது. இது தொடர்பாக இந்திய அரசும், டெஸ்லா நிறுவனமும் பேசி வந்தன.

இதற்காக எலான் மஸ்க் இந்தியா வர இருந்தார். அவரது வருகையின் போது, டெஸ்லா மின் வாகன உற்பத்தி ஆலை மற்றும் விற்பனை பிரிவு உள்ளிட்டவற்றிற்கு, பல கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டு திட்டங்களை அறிவிப்பார் என, எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அவரது வருகை, பார்லி., தேர்தல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது.
மோடி பிரதமராக பதவி ஏற்றபோதும், எலான் மஸ்க் தன் வாழ்த்து பதிவில், இந்தியாவில் தன் நிறுவனம் உற்சாகமான பணிகளைச் செய்ய ஆவலுடன் காத்திருப்பதாக தெரிவித்து இருந்தார்.

இதையடுத்து, டெஸ்லா நிறுவனத்தின் இந்திய முதலீடுகள் உறுதிப்படுத்தப்பட்டதாக தொழில்துறையினரால் கருதப்பட்டது.

இந்த நிலையில், டெஸ்லா நிறுவனத்தின் அதிகாரிகள், முதலீடு சம்பந்தமாக இந்திய அதிகாரிகளை தொடர்பு கொள்வதை நிறுத்தி உள்ளதாக, ‘புளும்பெர்க்’ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நிதி பிரச்னைகள் காரணமாக, இந்தியாவில் புதிய முதலீடுகளை மேற்கொள்ளும் திட்டம் எதுவும் டெஸ்லாவிடம் இல்லை என்று கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here