சிவ பெருமானுக்கு விருப்பமான வில்வம்

எத்தனையோ இலைகள் இருந்தாலும் வில்வம் மட்டும் சிவனுக்கு பிரியமானதாக ஏன் சொல்கிறோம் என்ற கேள்வி அனைவரின் மனதிலும் வரும். இந்த கேள்விக்கு விடை தெரிய வேண்டும் என்றால் முதலில் வில்வத்தின் சிறப்புகள் என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டும். வில்வத்தின் புனிதம், மகத்துவம் பற்றி தெரிந்தால் சிவனுக்கு ஏன் வில்வம் உகந்தது என சொல்கிறோம் என்பது விளங்கும்.

சிவ வழிபாட்டில் மிக முக்கியமானது வில்வம். சிவ பூஜை செய்யும் போது ஒரே ஒரு வில்வத்தையாவது சிவனுக்கு படைக்க வேண்டும். இல்லையென்றால் சிவ பூஜை முழுமை பெறாது என சாஸ்திரங்கள் சொல்கின்றன. வில்வ மரத்தின் கிளைகள் வேதங்களுக்கு இணையானதாக சொல்லப்படுகிறது. வில்வ மரம் சிவ பெருமானுக்கு மட்டுமின்றி, மகாலட்சுமிக்கும், சக்கரத்தாழ்வாருக்கும் ஏற்ற இலையாகவும், மகாலட்சுமி வாசம் செய்யும் 108 பொருட்களில் ஒன்றாகவும் சொல்லப்படுகிறது.

வில்வத்தின் தனிச்சிறப்புகள் :

எத்தனையோ இலைகள் இருக்க வில்வத்தை மட்டும் சிவ பூஜைக்கு ஏற்றதாக சொல்வதற்கான காரணத்தை இங்கு தெரிந்து கொள்ளலாம்.தேவலோகத்தைச் சேர்ந்த ஐந்து தெய்வீக விருட்சங்களில் ஒன்று வில்வம். பாதிரி, வன்னி, மா, மந்தாரை ஆகிய ஐந்து விருட்சங்களைப் பஞ்ச விருட்சங்கள் என்று போற்றுகின்றன புராணங்கள். இந்த ஐந்து மரங்களில் ஒன்றான வில்வத்தை நாம் தொட்டாலே, அது நம்மைப் புனிதப்படுத்தும் தன்மை கொண்டது. இதை ஸ்பரிசித்து உட்கொண்டாலே மோட்சம் கிட்டும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. வில்வம் சிவபெருமானின் அம்சம் என்பது மட்டுமல்ல, முருகனுக்கும் மிகவும் பிரியமானது. முருகனின் அர்ச்சனை நாமங்களில், ‘வில்வ பிரியா’ என்பதும் ஒன்று. வில்வ மரத்தை 11 முறை வலம் வந்து வணங்குவதும், விளக்கேற்றி வழிபடுவதும் தீராத பிரச்சனைகளையும், தீராத நோய்களையும் தீர்க்கக் கூடியதாகும்.பெரும்பாலான சிவாலயங்களில் வில்வ விருட்சமே தலவிருட்சமாக அமைந்திருக்கிறது.

வில்வ மந்திரம் :

வில்வ இலை சிவனின் மூன்று கண்களை குறிப்பதாக சொல்லப்படுகிறது. ஒரே ஒரு வில்வ இலையை எடுத்து பக்தி சிரத்தையுடன் உட்கொள்ள, பிறவியின் தோஷங்கள் அனைத்தும் நிவர்த்தி ஆகிவிடும்.

“திரிதளஞ்ச; திரிகுணாகாரம்;
திரிநேத்ரஞ்ச; திரியாயுதம்;
திரிஜன்ம பாப சம்ஹாரம்
ஏக பில்வம் சிவார்ப்பணம்”

என்ற மந்திரத்தை உச்சரித்து உண்பது பெரியோர்களின் வழக்கம். வில்க இலையை சிவனுக்கு படைத்த பிறகு அதை கையோடு வீட்டிற்கு எடுத்துச் செல்ல வேண்டும். சிவனுக்கு வில்வம் நடைக்கும் போது அதில் ஒரு விதமான நேர்மறையான அதிர்வலைகள் ஏற்படும். இதை வீட்டில் கொண்டு போய் வைக்கும் போது அந்த அதிர்வலையானது நீண்ட நாட்களுக்கு வீட்டில் நிறைந்திருக்கும் என சொல்லப்படுகிறது. மொத்தம் 12 வகையான வில்வங்கள் உள்ளன. இவற்றில் மகா வில்வத்தை கொண்டு சிவனை பூஜிப்பது மிக சிறப்பானதாகும்.

வில்வத்திற்கு இவ்வளவு மகத்துவமா?

வில்வ இலை திரிசூலத்தின் அடையாளமாகவும், இதில் இடது பக்கம் உள்ள இலை பிரம்மா என்றும், வலது பக்கம் உள்ள இலை விஷ்ணு என்றும், மையத்தில் உள்ள இலை சிவ பெருமான் என்றும் சொல்லப்படுகிறது. அதோடு இச்சா, கிரியா, ஞானம் என்னும் மூன்று சக்திகளின் அம்சமாக விளங்குவதாகவும் வில்வத்தை குறிப்பிடுகிறார்கள். அது மட்டுமல்ல வில்வத்திற்கு நிர்மால்ய தோஷம் கிடையாது. அதாவது, எந்த ஒரு பொருளாக இருந்தாலும் ஒருமுறை இறைவனுக்கு படைத்து விட்டால் அது நிர்மால்யம் எனப்படுகிறது. நிர்மால்யம் என்றால், மீண்டும் வழிபாட்டிற்கு பயன்படுத்த உகந்தது அல்ல என்று பொருள். ஆனால் வில்வத்தை மீண்டும், மீண்டும் எத்தனை முறை வேண்டுமானாலும் பூஜைக்கு பயன்படுத்தலாம் என சாஸ்திரங்கள் சொல்கின்றன.

வில்வம் தரும் புண்ணிய பலன்கள் :

தீர்க்க முடியாத பல ஜென்ம பாவங்களை போக்கும் தன்மை கொண்டது வில்வ இலையாகும். ஞாயிற்றுக்கிழமையன்று சிவனுக்கு வில்வத்தால் அர்ச்சனை செய்வது மிகவும் சிறப்பானதாகும். வில்வத்தால் அர்ச்சனை செய்யும் போது சிவனுக்கு நாம் நெருக்கமானவர்களாகவும், சிவனின் அருளை பெறுவதற்கு ஏற்றவர்களாகவும் ஆகிறோம். வில்வ மரத்தை வீட்டில் வளர்ப்பதும், வில்வ மரத்திற்கு தண்ணீர் ஊற்றி பராமரிப்பதும் அஸ்வமேத யாகம் செய்ததற்கு இணையான புண்ணியத்தை தரும். ஒரு வில்வ மரத்தை வளர்ப்பதால் 108 சிவாலயங்களை தரிசித்த பலனையும், ஆயிரம் பேருக்கு அன்னதானம் அளித்த பலனையும் பெற்றுத் தரும். ஒரே ஒரு வில்வ தளத்தால் இறைவனுக்கு அர்ச்சனை செய்வது லட்சம் தங்க மலர்களைக் கொண்டு அர்ச்சனை செய்வதற்கு சமமானதாகும்.

வில்வ இலைகளை பறிக்கும் போது தவிர்க்க வேண்டியவை :

*வில்வ இலைகளை சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமை, சதுர்த்தி, அஷ்டமி, அமாவாசை, பெளர்ணமி, பிரதோஷம், சிவராத்திரி ஆகிய நாட்களில் பறிக்கக் கூடாது.

* வில்வ தளத்தில் இருக்கும் மூன்று இலைகளைத் தனித்தனியாக பறிக்கக் கூடாது.

* வில்வ இலைகளை மரத்தில் இருந்து பறித்ததும், தண்ணீரில் நன்கு கழுவி சுத்தம் செய்யாமல் பூஜைக்கு பயன்படுத்தக் கூடாது.

* கோவிலில் கொடுக்கும் வில்வத்தையோ அல்லது காய்ந்த போன வில்வத்தையும் கூட அலட்சியம் செய்யக் கூடாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here