OUM, சென்னைஸ் அமிர்தா மாணவர்களுக்கான கல்விப் பாதையைத் திறந்துள்ளது.

(ராமேஸ்வரி ராஜா, படங்கள்: பிரகாஷ் வேலு)
  கிளானா ஜெயா, 
வேலை செய்பவர்களுக்கான  முன்னணி டிஜிட்டல் பல்கலைக்கழகமாகத் திகழும் மலேசியப் பொதுப் பல்கலைக்கழகம் (OUM)  இந்தியாவின் உபசரணை மாணவர்களுக்கான  ஒரு புதிய கல்விப் பாதையைத் திறந்திருக்கிறது.
சென்னைஸ் அமிர்தா கல்விக் குழுமத்துடன் இணைந்து கல்வித் திட்டங்கள் மாணவர்கள், பணியாளர்களின் உயர்கல்வி, மேம்பாட்டில்  ஒத்துழைப்பதற்கு  இணக்கம் தெரிவித்திருக்கிறது.  சென்னைஸ் அமிர்தா மாணவர்கள் தங்கள் உயர்கல்வியைத் தொடர்வதற்கு  விரிவான  ஒரு கல்வித் திட்டத்தை வழங்குவதை OUM அதன் முக்கிய இலக்காகக் கொண்டிருக்கிறது என்று  பல்கலைக்கழகத்தின் முதல்வர் துணைவேந்தர் பேராசிரியர் டாக்டர் அமாட் இஸானி அவாங் தெரிவித்தார்.
OUM பல்கலைக்கழகம் வேலை செய்பவர்களுக்கான ஆன்லைன் கற்றல் மூலம் அவர்களின் உயர்கல்வித் தகுதிகளை மேம்படுத்திக் கொள்வதற்கு உதவுவதோடு தனித்திறனையும் ஆற்றலையும்  பலப்படுத்துகிறது.
கல்வி, வணிகம்,  மேலாண்மை,  தொழில்நுட்பம்,  பயன்பாட்டு அறிவியல், சமூக அறிவியல்,  மனிதநேயம் என மலேசியத் தர நிர்ணயிப்பு வாரியம் (MQA)  அங்கீகரித்திருக்கும் 55 கல்வித் திட்டங்களை OUM  வழங்குகிறது.
மாணவர்கள் ஆன்லைன் வழி கற்பதற்கும்  விண்ணப்பிக்கலாம்.  அல்லது நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகத்தின்  35 கற்றல் மையங்களில் ஏதேனும் ஒன்றில் சேரலாம்.
இப்பல்கலைக்கழகத்தின் கல்வி தாக்கம் மலேசியாவிற்கு அப்பாலும்  பிரபலமடைந்திருக்கிறது.  இந்தோனேசியா,  வியட்நாம், இலங்கையில் உள்ள OUM பல்கலைக்கழகங்களில் அனைத்துலக மாணவர்கள் பதிந்து கொள்ளலாம்.
அதேசமயம் இப்பல்கலைக்கழகத்தின்  கல்விப் பங்காளிகளாக இருக்கும்  ஐக்கிய அரபு அமீரகம், கானா, சோமாலியா ஆகிய நாடுகளில்   OUM  2001ஆம் ஆண்டிலிருந்து செயல்படத் தொடங்கியிருக்கிறது. இதுவரை  OUM  1 லட்சத்திற்கும் அதிகமான பட்டதாரிகளை உருவாக்கியிருக்கிறது என்று பேராசிரியர் டாக்டர் அமாட் இஸானி மேலும் குறிப்பிட்டார்.
இதனிடையே,  சென்னைஸ் அமிர்தா கல்விக் குழுமம் இந்தியாவில் மிகுந்த பிரபலமான ஹோட்டல் மேலாண்மைக் கல்வி மையமாகத் திகழ்கிறது. சென்னைஸ் அமிர்தா கல்விக் குழுமம் ஹோட்டல் மேலாண்மைத் துறையில் டிப்ளோமா, பட்டப் படிப்புக் கல்வியை வழங்குகிறது.
சென்னை, பெங்களூரு, பால்கம்பேட், ஹைதராபாத், விஜயவாடா ஆகிய இடங்களில் உள்ள இதன் கல்வி மையங்களில் இத்துறையில் படிப்பதற்கு  ஒவ்வோர் ஆண்டும்  3 ஆயிரம் மாணவர்கள் பதிந்துகொள்கின்றனர். 
அதன் வேலை வாய்ப்பு உதவித் திட்டத்தின் கீழ் பல்வேறு நாடுகளில் 24 ஆயிரம் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு பெற்றுத் தரப்பட்டுள்ளது. அண்மைய ஆண்டுகளில்  சென்னைஸ் அமிர்தா மாணவர்கள் உள்ளூர்,  அனைத்துலக சமையல் போட்டிகளில்  நனிச் சிறந்த வெற்றிகளைப் பதிவு செய்திருக்கின்றனர்.
கடந்த பிப்ரவரி மாதம்  ஜெர்மனி, ஸ்டட்கார்ட் நகரில் நடைபெற்ற  IKA/Culinary Olympics 2024 போட்டியில் பங்கேற்ற வெற்றி பெற்று பதக்கங்களை வென்ற சென்னை அமிர்தா கல்விக் கழகத்தின் இரண்டு மாணவர்களை (OUM)  ஜூலை 1ஆம் தேதி பல்கலைக்கழகத்திற்கு வரவழைத்து சிறப்பு செய்து கௌரவித்தது.
அப்போது பேசிய பேராசிரியர் டாக்டர் அமாட் இஸானி,  இவர்களின் சாதனைகள் இவர்களின் தனிப்பட்ட திறமைகளில் மட்டும் பிரதிபலிக்கவில்லை. மாறாக, சென்னைஸ் அமிர்தா கல்விக் கழகத்தில் அவர்கள் பெற்ற கல்வியையும் செயல்பயிற்சிகளையும் திறனையும் எடுத்துக்காட்டுகிறது என்று  தெரிவித்தார்.
இம்மாணவர்களுக்கு  பேராசிரியர் டாக்டர் அமாட் இஸானி கேடயம் வழங்கி கௌரவித்தார். இந்தச் சிறப்பு நிகழ்ச்சியில்  OUM   உதவித் தலைவரும் துணை வேந்தருமான  பேராசிரியர் சாந்தி ராகவன்,  வணிக மேம்பாட்டுத் துறை துணை வேந்தர் பேராசிரியர் யோன் ரோஸ்லி, பல்கலைக்கழக வணிக மேம்பாட்டு அதிகாரிகள் பங்கேற்றனர்.
மக்கள் ஓசை இயக்குநர் டத்தோ ச. கோபாலகிருஷ்ணன்  சிறப்புப் பிரமுகராக அழைக்கப்பட்டு, டாக்டர் அமாட் இஸானி அவருக்கு நினைவுச் சின்னம் வழங்கி சிறப்பித்தார்.
இந்த நிகழ்ச்சியில் வெற்றியாளர்கள் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் Culinary Olympics 2024  போட்டியில்  கலந்துகொண்ட ஒரே இந்திய கல்வி நிறுவனமாக சென்னைஸ் அமிர்தா திகழ்ந்தது.
சென்னைஸ் அமிர்தாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஜெர்மனியில் நடைபெற்ற இப்போட்டியில் பறங்கிக்காய், காய்கறி, பழங்கள் ஆகியவற்றைச் செதுக்கி வடிவமைக்கும் போட்டி மிகப் பெரிய சவாலாக இருந்தது. இதற்கு மூன்று மாத காலப் பயிற்சி தேவைப்பட்டது. 
சென்னைஸ் அமிர்தா கல்விக் குழுமம் ஆக்கப்பூர்வமான பயிற்சியை வழங்கியது. இதன் பலனாக  வெண்கலப் பதக்கம் வெல்ல முடிந்தது.பினாங்கில் நடைபெற்ற பழங்கள், காய்கறி ஆகியவற்றைச் செதுக்கி அலங்கரிக்கும்போட்டியிலும் பங்கேற்றேன். என்னுடைய அடுத்த இலக்கு இந்தியாவையும் கல்லூரியையும் பிரதிநிதித்து சமையல் கலையில்  உலகக் கோப்பையில் பங்கேற்று  கிண்ணத்தை வெல்ல வேண்டும் என்பதே என்னுடைய லட்சியம்,  இலக்கு என்றார் ஆகாஷ்ராஜ்.
கடுமையான குளிரில்  கைகள் நடுங்க பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றைச் செதுக்கி வடிவமைத்து பதக்கங்களை வென்றது ஒரு மிகப் பெரிய சாதனையாகும். ஜெர்மனியில் நடைபெற்ற சமையல் கலைப் போட்டியில் சென்னைஸ் அமிர்தா கல்விக் கழகத்தின் சார்பில்  கலந்துகொண்டோம்.  அப்போது அங்கு குளிர்காலம். 5 பாகை செல்சியஸ் குளிரில் உறைந்துபோனோம்.
இந்தியப் பழங்களுக்கும் ஜெர்மனிய பழங்களுக்கும் நிறைய வேறுபாடுகள் இருந்தன. இந்தியாவில் பழங்கள் சிறியதாக இருக்கும். ஆனால், ஜெர்மனியில் பழங்களின் அளவு மிகப் பெரியதாக இருந்தது.  அவற்றைத் தேடி வாங்குவதும் ஒரு சவாலாகவே இருந்தது. 
குளிரில் இறுகிப் போயிருந்த பழங்களைக் கத்தியால் செதுக்க முடியவில்லை.  ஆனால்,  போட்டியில் பங்கேற்ற  பெங்களூர் கெம்பஸ் மாணவர்கள் இரண்டு தங்கம், மூன்று வெள்ளி,  ஒரு வெண்கலம் என்று பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர்.
அதேபோல்  சென்னை கெம்பஸ் மாணவி ஒரு தங்கம், 2 வெள்ளிப் பதக்கங்கள் வென்றார். இந்த வெற்றியானது மாணவர்களின் மனதை உறுதிப்படுத்தியது, சமையல் கலைப் போட்டியில் முதன்முறையாக இந்தியக் கொடி பறந்தது என்று சென்னை அமிர்தாஸ் கல்லூரி பயிற்றுநர் செந்தில்குமார் பெருமையுடன் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here