ஏரியில் விழுந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி மரணம்

உலு சிலாங்கூர், செரெண்டா தாமான் தாசேக் தெராதாய் பகுதியிலுள்ள ஏரியில் தவறி விழுந்த ஒன்பது வயது சிறுவன், சிகிச்சை பலனின்றி செலாயாங் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை இரவு (ஜூலை 7) இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. உலு சிலாங்கூர் மாவட்ட காவல்துறைத் தலைவர் அஹ்மத் பைசல் தஹ்ரிம் கூறுகையில், மாலை 6.04 மணியளவில் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கு MERS 999 அழைப்பு வந்தது.

சிறுவன் ஏரியில் விழுந்ததையடுத்து, சிறுவனின் நண்பர்கள் பலர் அருகில் வசிப்பவர்களிடம் உதவி கேட்க ஓடியதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மூன்று போலீஸ் அதிகாரிகள் மாலை 6.08 மணிக்கு சம்பவ இடத்திற்கு வந்தனர். மேலும் 6.52 மணியளவில் பொதுமக்களின் உதவியுடன் பாதிக்கப்பட்ட நபர் ஏரியில் இருந்து மீட்கப்பட்டார்.

மாலை 7 மணியளவில், குவாலா குபு பாரு தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து ஏழு தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பாதிக்கப்பட்டவருக்கு முதலுதவி அளித்த போது அச்சிறுவன் உயிருடன் இருந்தாகவும் பின்னர் செலாயாங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில், சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் உதவி இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் முக்தார் கூறுகையில், சம்பவம் நடந்தபோது சிறுவன் நன்னீர் ஓடுகளைத் தேடிக் கொண்டிருந்ததாக நம்பப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here