டிஏபி மீது சீனர்கள் நம்பிக்கை இழக்கிறார்களா? பேராசிரியர் ராமசாமி கேள்வி

சுங்கை பாக்காப் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் சீன வாக்காளர்கள் குறைந்த எண்ணிக்கையில் தான் வாக்களித்தது குறித்து அம்னோவின் தேசிய மூத்தோர் கிளப் (NVC) கலக்கமடைந்துள்ளதுஎன்று உரிமை கட்சியின் அமைப்புத் தலைவர் பேராசிரியர் டாக்டர் ப.ராமசாமி கூறினார்.

இத்தொகுதியில் 22 விழுக்காடு சீன வாக்காளர்கள் உள்ளனர். டிஏபி தலைவர்கள் சீன வாக்காளர்களை கவர்வதில் தோல்வி கண்டிருக்கின்றனர். இது கவலை அளிப்பதாக உள்ளது என்று அதன் தலைவர் டத்தோ முஸ்தபா யாக்கோப் வருத்தம் தெரிவித்தார்.

2024, ஜுலை 6 ஆம் தேதி நடந்த வாக்களிப்பின் போது, ​​சுமார் 47 விழுக்காடு சீன வாக்காளர்கள் மட்டுமே வாக்களிக்க வந்தனர்.

இவர்களுல் பெரும்பான்மையானவர்கள் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக்கு வாக்களித்தாலும், சிலர் விரக்தியில் பெரிக்காத்தான் நேஷனலுக்கு வாக்களித்திருக்கலாம்.

மலாய்க்காரர்கள் 70 விழுக்காடும் இந்தியர்கள் 57 விழுக்காட்டினரும் வாக்களித்தனர்.

ஒருவேளை, சீன வாக்காளர்களை திரட்டுவதில் டிஏபி சிறப்பான பங்கை ஆற்றவில்லை ஆனால் அதே நேரத்தில், பொதுவாக ஆளும் கூட்டணிக்கு சீனர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அதிருப்தி டிஏபி-க்கான ஆதரவில் சரிவு ஏற்படுவதற்கு காரணமாக இருக்கலாம்.

ஜசெக அல்லது பக்காத்தான் ஹராப்பான் தலைமையிலான கூட்டணிக்கு அரசியல் மாற்று இல்லை என்று சீனர்கள் நினைக்கலாம்.

எனினும், நாட்டில் தங்களுக்குத் தேவையானவை சரிவர கிடைக்கவில்லை என்பதில் அவர்கள் அதிருப்தியாக உள்ளனர் என்று பேராசிரியர் ராமசாமி தெரிவித்தார்.

டிஏபி தலைவர்கள் ஒரு காலத்தில் சீன கலாச்சாரம், மொழி உரிமைகளுக்காக உரக்க குரல் எழுப்பியவர்கள்; போராடியவர்கள். இருப்பினும், அத்தகைய சூழ்நிலை தற்போது இல்லை.

 

அமைச்சர்கள், துணை அமைச்சர்கள், மாநில ஆட்சிக்குழு உள்ளிட்ட பதவிகளுடன் பக்காத்தான் ஹராப்பான் தலைமையிலான கூட்டணியின் ஒரு பகுதியாக இருப்பதால், ஜசெக தலைவர்கள் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் மலாய் மேலாதிக்க அரசாங்கத்திற்கு “மண்டோர்” போல் நடந்து கொள்கிறார்கள்.

ஜசெக அரசாங்கத்தில் அதிக எண்ணிக்கையிலான நாடாளுமன்ற இடங்களைக் கொண்டிருக்கலாம், ஆனால் இன்றைய அரசாங்கத்தில் அதன் செல்வாக்கு மிகக் குறைவு.

டிஏபி அமைச்சர்கள், துணை அமைச்சர்கள் கொள்கைகளை செயல்படுத்துவதை விட அதிகாரவர்க்கமாக செயல்படுகின்றனர்.

அரசாங்கக் கொள்கைகளின் செயலாக்கத்தில் அவர்களுக்கு எந்த ஈடுபாடும் இல்லை.

இந்தியர்கள் பக்காத்தான் ஹராப்பான் தலைமையிலான கூட்டணியின் பங்காளிகளான டிஏபி, பிகேஆர் ஆகியவற்றிலிருந்து மெல்ல மெல்ல விலகிக்கொண்டிருக்கையில், சீனர்கள் ஓர் அரசியல் மாற்றுக் கட்சியைத் தேடுகின்றனர்.

துரதிர்ஷ்டவசமாக, அரசியல் மாற்று அங்கு இல்லை.

சுங்கை பாக்காப் சட்டமன்ற தொகுதியில் உள்ள சீன வாக்காளர்கள், இலக்கு வைக்கப்பட்ட டீசல் மானியங்களை அறிமுகப்படுத்துதல், பொருட்கள், சேவைகளின் விலை உயர்வு, பணவீக்கம் பிற நிகழ்வுகளால் அரசாங்கத்தின் மீது அதிருப்தி அடைந்துள்ளனர்.

சீன வாக்காளர்கள் இரட்டை மொழிக் கல்வி (DLP) கொள்கை தொடர்பில் கல்வி அமைச்சின் சமீபத்திய உத்தரவு குறித்து வருத்தம் அடைந்துள்ளனர்.

பஹாசா மலாயுவில் அறிவியல், கணிதத்தை குறைந்தபட்சம் ஒரு வகுப்பிலாவது முதலாம் வகுப்பு, படிவம் I இல் கற்பிக்க வேண்டும் என்ற கட்டாயத் தேவை சீன சமூகத்தை வருத்தமடையச் செய்துள்ளது.

இந்த உத்தரவு பெற்றோரின் தேர்வு முடிவை நிராகரித்திருக்கிறது.

பிரதமர் அன்வார் இப்ராஹிமிடம் டிஎல்பி விவகாரத்தை டிஏபி முறையான முறையில் எடுத்துச் செல்லவே இல்லை.

டிஏபி-யின் முக்கிய தலைவர் அன்வாரின் அரசியல் செயலாளராக செயல்படுவது துரதிர்ஷ்டவசமானது. சீன சமூகம் தொடர்ந்து இரண்டாம் , மூன்றாம் நிலைத் தலைவர்களின் பாத்திரத்தை வகிக்கும் பட்சத்தில் அவர்களின் துணிச்சலான கோரிக்கைகளை கட்சி முன்வைப்பது எப்படி சாத்தியமாகும் என்று அவர் கேள்வி எழுப்பினார்.

சீனர்கள் மத்தியில் ஆதரவை இழக்க மசீச-வுக்கு சுமார் நாற்பது ஆண்டுகள் ஆனது, ஆனால் ஜசெக மீதான சீனர்களின் ஏமாற்றத்திற்கு குறுகிய காலமே தேவைப்படலாம். இது ஏற்கெனவே நடந்துகொண்டிருக்கிறது என்று பேராசிரியர் ராமசாமி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here