மலேசிய இந்திய மக்கள் கட்சித் தலைவர் புனிதனுடன் மஇகாவின் டி. மோகன் திடீர் சந்திப்பு!

பெட்டாலிங் ஜெயா:

ண்மையில் மலேசிய இந்திய காங்கிரஸ் (மஇகா) கட்சியின் உதவித் தலைவர்களுக்கான தேர்தலில் வெறும் 58 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த டி. மோகன் மலேசிய இந்திய மக்கள் கட்சித் தலைவரான பி.புனிதனைச் சந்தித்துப் பேசினார்.

பி.புனிதன் முன்னாள் மஇகா உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

கட்சித் தேர்தலில் தம்மை எதிர்த்துப் போட்டியிட்ட செனட்டர் ஆர். நெல்சனுக்கு மஇகா தலைவர் எஸ். ஏ விக்னேஸ்வரன் ஆதரவு அளித்து வெற்றி பெற உதவியதாக மோகன் அதிருப்தி தெரிவித்திருந்தார்.

எனவே, டி.மோகன், பி.புனிதனைச் சந்தித்துப் பேசியதை அடுத்து, அவர் மஇகாவிலிருந்து விலகி மலேசிய இந்திய மக்கள் கட்சியில் சேரக்கூடும் என்ற பேச்சு எழுந்துள்ளது.

மலேசிய இந்திய மக்கள் கட்சி, எதிர்க்கட்சியான பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியில் அங்கம் வகிக்கிறது.

மாறாக, மஇகா தேசிய முன்னணி கூட்டணியில் உள்ளது. தேசிய முன்னணி ஆளும் கூட்டணியான பக்கத்தான் ஹரப்பானில் அங்கம் வகிக்கிறது.

இந்நிலையில், மோகன் தமது கட்சியில் இணைவது குறித்து பேசவில்லை என்று புனிதன் தெரிவித்தார்.

“அரசியல் சூழலைப் பற்றியும் மலேசிய இந்தியர்கள் எதிர்நோக்கும் சவால்கள் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடினோம். இந்தியச் சமூகத்துக்காக மோகன் பாடுபட்டுள்ளார். அவரது பங்களிப்பு அளப்பரியது. எனவே, அவரைப் போன்ற ஒருவருடன் கருத்துப் பரிமாற்றத்தில் ஈடுபடுவது நன்மை பயக்கும்.

“மோகன் மஇகாவின் முன்னாள் இளையரணித் தலைவர். அவர் தலைமையின்கீழ் நான் ஒரு காலத்தில் செயல்பட்டவன். அவர்தான் என்னை அரசியலுக்குக் கொண்டு வந்தார். அவரைப் பார்த்துப் பேசியதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்,” என்று முன்னாள் சிலாங்கூர் மஇகா இளையரணித் தலைவருமான புனிதன் கூறினார்.

அண்மையில் நடைபெற்ற மஇகா கட்சித் தேர்தலில் உதவித் தலைவர் பதவியை எம். அசோஜன், டி. முருகையா ஆகியோர் தக்கவைத்துக்கொண்டனர். மஇகா கல்விக் குழுவின் தலைவரான செனட்டர் ஆர். நெல்சன் உதவித் தலைவராகப் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அசோஜன் 8,633 வாக்குகளைப் பெற்று முதலிடம் பெற்றார். முருகையா 8,566 வாக்குகளையும் நெல்சன் 8,338 வாக்குகளையும் பெற்றனர்.

இதற்கு முன்பு உதவித் தலைவராக இருந்த திரு டி. மோகன் 8,280 வாக்குகளைப் பெற்று நான்காவது இடத்தைப் பிடித்து உதவித் தலைவர் பதவியை இழந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here