ரோஹித் சர்மா கேப்டனாக நீடிப்பார்.. முற்றுப்புள்ளி வைத்த ஜெய் ஷா

சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ரோஹித் சர்மா ஓய்வு பெற்ற நிலையில் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளுக்கு புதிய கேப்டன் அறிவிக்கப்படுவாரா என்ற கேள்வி சமூக வலைதளங்களில் பரவலாக எழுந்துள்ளது.

இதற்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் கௌரவ செயலாளர் ஜெய்ஷா விளக்கம் அளித்துள்ளார். 37 வயதாகும் ரோஹித் சர்மா இந்திய டி20 கிரிக்கெட் அணியை சிறப்பாக வழி நடத்தி உலக கோப்பை வெல்வதற்கு முக்கிய காரணமாக அமைந்தார். இதையொட்டி அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

உலக கோப்பை கிரிக்கெட் தொடரை தொடர்ந்து சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ரோஹித் சர்மா ஓய்வை அறிவித்துள்ளார். ரோஹித் சர்மாவின் வயது அதிகரித்துக் கொண்டு வரும் சூழலில் இந்திய அணிக்கு ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான கேப்டனை விரைவில் அறிவித்தால்தான் அணிக்கு நல்லது என்று சமூக வலைதளங்களில் விவாதங்கள் எழுந்தன.

தற்போது இந்திய அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் மூத்த வீரர்கள் அனைவருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டு இளம் வீரர்கள் மட்டுமே களத்தில் இறங்கியுள்ளனர்.

இந்நிலையில், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஆகிய மிக முக்கிய தொடர்களுக்கு ரோகித் சர்மா தான் கேப்டனாக செயல்படுவார் என்று ஜெய் ஷா அறிவித்துள்ளார்.

இதன் மூலம் அடுத்த ஆண்டு வரை இந்திய அணியின் ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான கேப்டன் யார் என்ற கேள்விக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here