ஹாத்ரஸ் சம்பவம்: போலே பாபா பற்றி முக்கிய குற்றவாளி பல்வேறு தகவல்

புதுடெல்லி: ஹாத்ராஸ் சமயக் கூட்டத்தில் நடந்த நெரிசல் சம்பவம் தொடர்பாக மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளி என்று நம்பப்படும் மதுகரிடம் நடந்த விசாரணையில் போலே பாபா பற்றி பல முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 121 பேரை பலிவாங்கிய அந்தக் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக தேடப்பட்ட தல்வீர் பால், துர்கேஷ் குமார் இருவரும் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தப்பட்டனர்.

இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியான தேவ்பிரகாஷ் மதுகர் மற்றும் 4 பெண்கள் உள்ளிட்ட 9 பேர் ஏற்கெனவே கைதாகி உள்ளனர். போலே பாபாவுக்கு மிகவும் நெருக்கமானவர் இந்த மதுகர் என்று கூறப்படுகிறது. இதனால், மதுகரிடம் ஹாத்ரஸ் கூட்டம் தொடர்பான பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. பாபாவின் பினாமிகள் சொத்துக்கள் மதிப்பு கணக்கிடப்பட்டுள்ளது. நெரிசலுக்குக் காரணமான பாபாவின் பாதுகாவலர்கள் 100 பேரின் பெயர்களும், கைப்பேசி எண்களும் சேகரிக்கப்பட்டுள்ளன. இந்த வழக்கு குறித்து பதிவான முதல் தகவல் அறிக்கையில் போலே பாபாவின் பெயர் குறிப்பிடப்படவில்லை. இதற்கு முக்கிய காரணமாக போலே பாபாவின் உண்மையான பெயர் சூரஜ் பால் ஜாத்தவ்.

காஸ்கஞ்ச் மாவட்டத்தின் பட்டியாலி கிராமத்தைச் சேர்ந்த இவர், உத்தர பிரதேச காவல்துறையில் காவலராக பணிபுரிந்து வந்தார். அப்போது குற்றவியல் வழக்கு ஒன்றில் சிக்கி சிறை சென்றதால் பணிநீக்கம் செய்யப்பட்ட இவர், நாரயண் சாக்கா விஷ்வ ஹரி என மாறி பின்னர் பாபாவானார். தலித்துகளின் செல்வாக்கு மிக்க பிரிவான ஜாத்தவ் சமூகத்தைச் சேர்ந்த பாபா, ஒரு வாக்கு வங்கியாகக் கருதப்படுகிறார். இதனால், அவர் மீது பாஜக, சமாஜ்வாதி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் விமர்சிக்கவில்லை.

பாபாவின் சமூகத்தவரும் தலித் ஆதரவு பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரான மாயாவதியும், இடதுசாரிகளும் மட்டும் விமர்சனம் செய்துள்ளனர். இந்தச் சூழலில், வழக்கை விசாரிக்கும் அலிகர் பகுதி காவல்துறை உயர் அதிகாரியான ஷலாப் மாத்தூர், ‘தேவை ஏற்பட்டால் வரும்நாட்களில் பாபாவிடமும் விசாரணை நடத்தப்படும்.’ எனத் தெரிவித்துள்ளார். இந்நிலையில், சிறப்புப் புலனாய்வுக் குழு, நெரிசல் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், காயமடைந்த பக்தர்கள் உள்ளிட்ட 119 பேரின் வாக்குமூலங்கள் அடங்கிய சுமார் 300 பக்கங்கள் அடங்கிய அறிக்கையை செவ்வாய்க்கிழமை சமர்ப்பித்தது.

அந்த அறிக்கையில், ஹாத்ரஸ் மாவட்ட ஆட்சியர் அனிஷ் குமார், காவல் கண்காணிப்பாளர் நிபுன் அகர்வால் மற்றும் எஸ்டிஎம் மற்றும் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கிய சிக்கந்திரா ராவ், ஜூலை 2ஆம் தேதி சத்சங் நிகழ்ச்சியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் அதிகாரிகள், காவலர்கள் ஆகியோரின் வாக்குமூலங்கள் அடங்கியுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here