ஜோகூர்:
கடன்வாங்கியவர்களை அச்சுறுத்துவதற்காக 400 ரிங்கிட் முதல் 700 ரிங்கிட் வரை பணம்கொடுத்து, கூலிக்கு ஆட்களை வேலைக்கு அமர்த்தும் வட்டி முதலைகளின் குட்டு அம்பலமாகியுள்ளது.
கடந்த ஜூன் 28 முதல் ஜூலை 1 வரை நான்கு நாட்கள் நடந்த சோதனையில் 35 முதல் 51 வயதுக்குட்பட்ட ஆண்கள் கைது செய்யப்பட்டதாகவும், அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், பல பரபரப்பான, திடுக்கிடும் சம்பவங்கள் கண்டறியப்பட்டதாக ஜோகூர் போலீஸ் தலைவர், ஆணையர் எம்.குமார் தெரிவித்தார்.
வீடுகளில் பெட்ரோல் குண்டு வீச 700 ரிங்கிட், சிவப்பு சாயம் வீசுவதற்கு 400 ரிங்கிட் என கூலி கொடுக்கப்படுகிறதாம்.
ஃபேஸ்புக் வழி இந்தக் கும்பலின் தலைவன் வேலை வாய்ப்பு விளம்பரம் செய்வதும், கூலிப்படையை தொடர்புகொண்டு கச்சிதமாக வேலையை முடிப்பதும் வாடிக்கையாக இருக்கிறதாம்.
மேலும், ” பணிகள் முடிந்ததும், அவர்கள் சிங்கப்பூரில் பதிவுசெய்யப்பட்ட தொலைபேசி எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலம் வீடியோ ஆதாரத்தை அனுப்ப வேண்டும் என்றும் பின்னர் அவர்களின் “சம்பளம்” அந்தந்த வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படும்” என்றும் விசாரணையில் கண்டறியப்பட்டதாக அவர் சொன்னார்.
இந்தக் கும்பலிடமிருந்து இரண்டு பெயின்ட் டப்பாக்கள், தின்னர், முகமூடிகள், மொபைல் போன்கள் மற்றும் மூன்று கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
நாசவேலை மற்றும் தீவைக்கும் போது சந்தேக நபர்கள் பொதுவாக முகமூடிகளால் தங்கக் முகத்தை மறைத்துக்கொள்வார்கள் என்று குமார் கூறினார்.
சிண்டிகேட்டின் மூளையாக செயல்பட்டவர் யார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது என்று கூறிய அவர், குறித்த அறுவரும் வரும் ஜூலை 14 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருப்பதாகவும் சொன்னார்.