கடவுச்சீட்டை திரும்ப ஒப்படைக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

புதுடெல்லி: வெளிநாட்டுக் குடியுரிமை காரணமாக தங்களது இந்தியக் கடவுச்சீட்டை (பாஸ்போர்ட்) ஒப்படைக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுபோல் கடவுச்சீட்டை ஒப்படைப்பவர்களில் டெல்லிவாசிகள் முதலிடத்திலும் அதற்கு அடுத்தடுத்த இடத்தில் முறையே பஞ்சாப், குஜராத்தைச் சேர்ந்தவர்களும் இருப்பதாகக் கூறப்படுகிறது. இவர்களில் பெரும்பாலானோர் 30 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்கள்.

வெளிநாடுகளுக்குச் செல்லும் பலரும் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் குடியேறியுள்ளனர். படிப்பதற்காக வெளிநாடுகளுக்குச் செல்பவர்கள் அங்குள்ள கட்டமைப்பு வசதி, பாதுகாப்பு, வாழ்க்கைத் தரம் ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டு அந்தந்த நாட்டிலேயே குடியேறி விடுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

1967ஆம் ஆண்டின் இந்தியக் கடவுச்சீட்டு சட்டத்தின்படி, இந்தியக் கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் வெளிநாட்டுக் குடியுரிமை பெற்றவுடன் தங்களது இந்தியக் கடவுச்சீட்டை ஒப்படைக்கவேண்டும் என்பது விதிமுறை. மூன்று ஆண்டுகளுக்குள் அவர்கள் தங்களது இந்தியக் கடவுச்சீட்டை ஒப்படைத்துவிட்டால் அபராதம் இல்லை.

ஆனால், மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக ஒப்படைக்காதவர்களுக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படுகிறது. இந்நிலையில், கடந்த 10 ஆண்டுகாலத்தில் தங்களது இந்தியக் கடவுச்சீட்டை ஒப்படைத்து வரும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகத் தெரியவந்துள்ளது.

2014 முதல் 2022ஆம் ஆண்டு வரை பாஸ்போர்ட்டை ஒப்படைப்பதில் டெல்லிவாசிகள் முதலிடத்தில் உள்ளனர். அவர்களில் மொத்தம் 60,414 பேர் கடவுச்சீட்டை ஒப்படைத்துள்ளனர். இதையடுத்து, பஞ்சாப்பைச் சேர்ந்தவர்கள் 28,117 பேரும் குஜராத்தைச் சேர்ந்தவர்கள் 22,300 பேரும் கடவுச்சீட்டை ஒப்படைத்துள்ளனர்.

கடந்த 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து குஜராத்தைச் சேர்ந்தவர்களில் 1,187 பேர் இந்தியக் கடவுச்சீட்டை ஒப்படைத்துள்ளனர். 2022ஆம் ஆண்டு குஜராத்தைச் சேர்ந்த 241 பேர் இந்தியக் கடவுச்சீட்டை ஒப்படைத்தனர். 2023ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை இருமடங்காக அதாவது 485 ஆக அதிகரித்துள்ளதாகப் பிரபல ஆங்கில ஊடகமான டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. நடப்பாண்டில் மே மாதம் வரை 244 பேர் இந்தியக் கடவுச்சீட்டை ஒப்படைத்து தங்களது இந்தியக் குடியுரிமையைத் துறந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here