டில்லிராணி முத்து
தெலுக் இந்தான், ஜூலை 19-
ஒற்றுமை அரசாங்கத்தின் தலைமைத்துவத்தில் தெலுக் இந்தான் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள அனைத்து தமிழ்ப்பள்ளிகள் மீது தொடர்ந்து கவனம் செலுத்தப்படுவ தோடு அவற்றின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் மானியம் வழங்கப்பட்டு வருகிறது என பாசிர் பெடாமார் சட்டமன்ற உறுப்பினரும் பேராக் மாநில அரசு ஆட்சிக்குழு உறுப்பினருமான வூ கா லியோங் தெரிவித்தார்.
முன்பு ஜசெக எதிர்க்கட்சியாக இருந்தபோதிலும், தெலுக் இந்தான் நாடாளுமன்ற உறுப்பினர் ஙா கோர் மிங்கும், தாமும் தெலுக் இந்தான் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள அனைத்து தமிழ்ப்பள்ளிகளுக்கும் தலா 10,000 ரிங்கிட் மானியம் வழங்கினோம் என்றார் அவர்.
இந்நிலையில் மத்தியில் அரசாங்கத்தை அமைத்த பிறகு மலேசிய கல்வி அமைச்சிடமிருந்து வெற்றிகரமாக மானியம் பெறப்பட்டது மட்டுமன்றி ஙா கோர் மிங்கும், தாமும் தமிழ்ப்பள்ளிகளுக்கான ஒதுக்கீட்டை தொடர்ந்து அதிகரித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

மலேசிய கல்வி அமைச்சிடமிருந்து 50,000 ரிங்கிட், ஙா கோர் மிங், தம்முடைய சார்பில் 30,000 ரிங்கிட், பழுதடைந்த கழிப்பறைகளை சீரமைப்பதற்கு 70,000 ரிங்கிட் என இப்போது இவ்வாண்டிற்கு செலாபாக் தோட்டத் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு மொத்தம் 150,000 ரிங்கிட் மானியம் வழங்கப்பட்டதாக வூ கா லியோங் மேலும் தெரிவித்தார்.
கடந்தாண்டு முதன்முறையாக அரசாங்கப் பள்ளிகளில் பழுதடைந்த கழிப்பறைகளை சீரமைக்கவும் மேம்படுத்தவும் நிதியை பெற்றன.
தொடர்ந்து இவ்வாண்டு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மலேசிய மடானி அரசாங்கம், செலபாக் தோட்டத் தமிழ்ப்பள்ளி போல் அரசு உதவிகள் பெறும் ஒவ்வொரு பள்ளிக்கும் கொள்கை அடிப்படையில் மானிய ஒதுக்கீடுகளை அதிகரிக்கும் உன்னதக் கொள்கையை விரிவுபடுத்தியுள்ளது என்றார் அவர்.

இனம், மதம், மொழி என எந்தவொரு வேறுபாடும், பாகுபாடும் இன்றி ஒற்றுமை அரசாங்கம் அனைத்து இனங்களையும் நன்முறையில் கவனித்தும், பாதுகாத்தும் வருகிறது என்பதை இது நிரூபிக்கிறது என்று வூ கா லியோங் சொன்னார்.
மாணவர்கள், ஆசிரியர்களின் நலன் கருதி அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப அரசாங்கம் கண்டிப்பாக இயன்ற உதவிகள் நல்கும்.
தெலுக் இந்தான் வாழ் இந்திய சமூகத்திற்கு தொடர்ந்து நற்செய்திகளை கொண்டு வரும் வகையில் தெலுக் இந்தான் ஜசெக குழு, தெலுக் இந்தான் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள அனைத்துதமிழ்ப்பள்ளிகளின் தேவைகளை அறிந்து உதவிட தம் இலக்கை தொடரும் என்றும் வூ கா லியோங் கூறினார்.
மானியம் வழங்கிய மலேசிய கல்வி அமைச்சுக்கும், ஙா கோர் மிங்கிற்கும், வூ கா லியோங்கிற்கும் செலாபாக் தோட்டத் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் உமா நாராயணன், பள்ளி நிர்வாகத்தின் சார்பில் தமது நன்றி தெரிவித்துக் கொண்டார்.




















