டில்லிராணி முத்து
தெலுக் இந்தான், ஜூலை. 22 –
பல இன மக்கள் வாழும் இந்த மலேசியாவில் அனைத்து இனத்தவர்களின் சமயம், கலை, கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை மலேசியர்களாக நாம் அனைவரும் போற்றி மதிக்க வேண்டும் என பாசிர் பெடாமார் சட்டமன்ற உறுப்பினரும் பேராக் மாநில அரசு ஆட்சிக்குழு உறுப்பினருமான வூ கா லியோங் வலியுறுத்தினார்.
மலேசிய இந்து சங்கம் தெலுக் இந்தான் வட்டாரப் பேரவையின் ஏற்பாட்டில் இங்குள்ள சிதம்பரம் பிள்ளை தமிழ்ப்பள்ளி மண்டபத்தில் காலை 7.30 மணி தொடங்கி வெகு விமரிசையாக நடைபெற்ற 46ஆம் ஆண்டு திருமுறை ஓதும் விழாவில் சிறப்பு பிரமுகராக கலந்து கொண்டு அவர் உரையாற்றினார்.
மலேசியா பல இன மக்கள் வாழும் ஜனநாயக நாடு என்பதால் அனைத்து இனத்தவர்களின் கலை, கலாச்சாரங்களைப் பாதுகாக்கும் வகையில் பிற சமூகத்தினருடன் ஒன்றிணைந்து இத்தகைய சமய விழாவில் கலந்து கொள்ளும்போது அவர்களின் சமய புரிந்துணர்வு மேலும் வலுவடைவதற்கும் வளர்க்கவும் உதவுகின்றது என்பதையும் வூ கா லியோங் சுட்டிக்காட்டினார்.
நாம் மலேசியாவில் இந்தியராக, சீனராக, மலாய்க்காரராக பிற இனத்தவர்களாக இருந்தாலும் கூட மற்ற இனங்களின் சமயம், கலை, கலாச்சாரம், பண்பாடு கூறுகளை தெரிந்து வைத்துக் கொள்வதோடு அவர்களின் நம்பிக்கைகளுக்கும் மதிப்பளித்து மலேசியர் என்ற எண்ணத்தில் என்றென்றும் மலேசிய குடும்பாக வாழ வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
மேலும் இன்றைய இளைய தலைமுறையினர் தீய வழிகளுக்கு செல்லாமல் தடுக்கவும் சமூகச் சீர்கேடுகளிலிருந்து விடுபடவும் அவர்களுக்கு நிறைவான சமயக் கல்வி மிக மிக அவசியம் என்பதை நான் நன்கு அறிவேன். காரணம் இந்நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்னதாக இந்து சமயக் கல்வி குறித்தும், திருமுறை ஓதுதல் குறித்தும் நான் என்னுடைய இந்து நண்பர்களிடமிருந்து கேட்டுக் தெரிந்து கொண்டேன்.
இந்து சமயம் புராதனமானது. காலத்தை வென்று நிற்கும் பெருமை பெற்றது. மேலும் எல்லா வகை மனித மனங்களையும் பண்படுத்தும் ஆற்றல் வாய்ந்தது என்பது எனக்கு நன்கு தெரியும்.
அத்தகைய சமயத்தை வருங்கால பிஞ்சு நெஞ்சங்களில் பதியமிடவேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது என அவர் நினைவுறுத்தினார்.
மலேசிய இந்து சங்கம் தெலுக் இந்தான் வட்டாரப் பேரவையினர் தெலுக் இந்தான் நாடாளுமன்றத் தொகுதியிலுள்ள பல பள்ளிகளிலும் ஆலயங்களிலும் சமய வகுப்புகளை நடத்தி வருகின்றனர். எனவே ஒவ்வொரு பெற்றோரும் தங்களின் பிள்ளைகளைத் தவறாமல் சமய வகுப்புக்கு அனுப்ப வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
இவ்வேளையில் தெலுக் இந்தான் தொகுதியில் நனிசிறந்த சேவைகளை வழங்கி வரும் மலேசிய இந்து சங்கம் தெலுக் இந்தான் வட்டாரப் பேரவையினரை அவர் மனம் திறந்து பாராட்டியதோடு, தெலுக் இந்தான் நாடாளுமன்ற உறுப்பினர் ஙா கோர் மிங்கும், தாமும் தொடர்ந்து இச்சங்கத்திற்கு பக்கப்பலமாக இருந்து முழு ஆதரவும் ஒத்துழைப்பும் நல்குவோம் என்றும் உறுதியளித்தார்.
தொடர்ந்து தெலுக் இந்தான் சிதம்பரம் பிள்ளைத் தமிழ்ப்பள்ளியின் மேம்பாட்டிற்கும் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும் ஙா கோர் மிங் சார்பிலும் தம்முடைய சார்பிலும் 50,000 ரிங்கிட் மானியத்திற்கான காசோலையை அப்பள்ளியின் தலைமையாசிரியர் இரா. கணேசனிடம் அவர் வழங்கினார்.
மேலும் எஸ்.பி.எம். தேர்வில் சிறந்த தேர்ச்சி பெற்ற இந்திய மாணவர்களுக்கு, மலேசிய இந்து சங்கம் தெலுக் இந்தான் வட்டாரப் பேரவையின் சார்பில் கணிசமான உதவித் தொகையை வூ கா லியோங் எடுத்து வழங்கினார்.
சிரமம் பாராமல் இந்த திருமுறை ஓதும் விழாவில் கலந்து கொண்டது மட்டுமன்றி தெலுக் இந்தான் இந்து சங்க வட்டாரப் பேரவைக்கும், தெலுக் இந்தான் வாழ் இந்தியர்களுக்கும் தொடர்ந்து உதவிக்கரம் நீட்டி வரும் ஙா கோர் மிங்கிற்கும் வூ கா லியோங்கிற்கும் இந்து சங்க தெலுக் இந்தான் வட்டாரப் பேரவையின் தலைவர் முனியாண்டி இராஜகோபால் தம்முடைய நெஞ்சார்ந்த நன்றியை பதிவு செய்துக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் பேராக் மாநில இந்து சங்கத் தலைவர் விவேக ரத்னா சுந்தரசேகரர் பெருமாள், பள்ளித் தலைமையாசிரிகள், ஆசிரியர்கள், ம.இ.கா. தெலுக் இந்தான் தொகுதி தலைவர் மணிகண்டன், தெலுக் இந்தான் நகராண்மைக்கழக உறுப்பினர்கள், பெற்றோர், மாணவர்கள் உள்ளிட்டு பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.