ஜோகூர் பாரு:
ஜோகூரில் சென்ற மாதம் கடத்தப்பட்ட ஆறு வயதுச் சிறுமி, சிறுவர்களுக்கான மனநல மருத்துவரிடம் சிகிச்சை பெறுவதாக அச்சிறுமியின் தாயார் கூறியுள்ளார்.
லியோ சியோ ஸின், 37, சிறுமியுடன் தான் மருந்தகத்தில் காத்திருப்பதைக் காட்டும் காணொளியையும் படத்தையும் ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
சிறுமி மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதால் மனநல மருத்துவரை நாடியதாகத் தாயார் குறிப்பிட்டார்.
இதற்கிடையே, சிறுமி கடத்தப்பட்டதற்கான நோக்கம் விரைவில் தெளிவுபடுத்தப்படும் என்று ஜோகூர் மாநிலக் காவல்துறைத் தலைவர் எம்.குமார் கூறியுள்ளார்.
முக்கிய சந்தேக நபரிடம் மேற்கொண்ட விசாரணையில் புதிய தகவல்கள் கிடைத்திருப்பதாக அவர் சொன்னார்.
“சந்தேகத்துக்குரியவர் சனிக்கிழமை வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளார். ஓரிரு நாள்களில் சிறுமி கடத்தப்பட்டதற்கான நோக்கத்தைக் கண்டுபிடிக்க இயலும் என்று நம்புகிறோம்,” என்றார் அவர்.
காவல்துறைத் தலைமையகத்தில் ஆகஸ்ட் 6ஆம் தேதி நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் இவ்வாறு கூறினார்.
முதற்கட்ட விசாரணையில் சந்தேக நபர் தனித்துச் செயல்பட்டதாகத் தெரியவந்ததாகவும் அவருக்குக் குற்றக் கும்பல்களுடன் தொடர்பில்லை என்றும் திரு குமார் கூறினார்.
சந்தேகத்துக்குரிய ஆடவர் ஆகஸ்ட் 4ஆம் தேதி மீண்டும் கைது செய்யப்பட்டு, மேல்விசாரணைக்காகத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்.
முன்னதாக, ஜூலை 23ஆம் தேதியிலிருந்து 13 நாள்களுக்குத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட அவர் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
ஜூலை 20ஆம் தேதி இஸ்கந்தர் புத்ரி கடைத்தொகுதியில் காணாமற்போன சிறுமி ஜூலை 23ஆம் தேதி சிலாங்கூரில் கண்டுபிடிக்கப்பட்டார்.