வைர நகைக்கடை தொழிலாளர்களையும் விட்டு வைக்காத வறுமை

சூரத்: உலக அளவில் தேவை குறைந்துள்ளதாலும் உள்ளூரில் போட்டி அதிகரித்துள்ளதாலும், இந்தியாவின் குஜராத் மாநிலம், சூரத் நகரில் செயல்பட்டுவரும் ஒரு வைரத் தொழில் நிறுவனம் தனது 50,000 ஊழியர்களுக்குப் பத்து நாள் கட்டாய விடுமுறை அறிவித்துள்ளது.

உலகின் ஆகப் பெரிய இயற்கை வைர நிறுவனமாக அறியப்படும் ‘கிரண் ஜெம்ஸ்’, உற்பத்தியைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஆகஸ்ட் 17 முதல் 27 வரை ஊழியர்களுக்கான கட்டாய விடுமுறை நடவடிக்கையை எடுத்துள்ளது.

ரஷ்யா – உக்ரேன் இடையிலான போரைத் தொடர்ந்து, ரஷ்யாவிலிருந்து பெறப்படும் வைரங்களுக்கு அமெரிக்காவும் ஜி7 உறுப்பு நாடுகளும் தடை விதித்துள்ளன. அந்நாடுகளின் இம்முடிவு இந்திய வைரத் தொழில்நிறுவனங்களில் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

வைரத் துறைக்கு இப்போது போதாத காலம். பட்டை தீட்டப்பட்ட வைரங்களுக்கு இப்போது உலகில் தேவையே இல்லை. அதனால் வைர உற்பத்தியைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பத்து நாள் விடுமுறை அறிவித்துள்ளோம். எங்களது நிறுவன வரலாற்றில் இப்படி ஒரு முடிவை எடுத்திருப்பது இதுவே முதன்முறை என்று கிரண் ஜெம்ஸ் நிறுவனத்தின் தலைவர் வல்லபாய் லக்கானி கூறியதாக ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

உலக அளவில் பட்டை தீட்டப்பட்ட வைரங்களுக்கான விலையும் சரிந்துள்ளதால், வைர நிறுவனங்கள் தொழிலைத் தொடர்ந்து நடத்த சிரமப்படுவதாகவும் லக்கானி சொன்னார். அதனால் சந்தையில் வைர வரத்து குறைந்தால், தேவை அதிகரித்து தொழிலும் மேம்படும் என அவர் நம்புகிறார். கிரண் ஜெம்ஸ் நிறுவனத்தின் வருடாந்தர லாபம் ரூ.17,000 கோடி (RM 8.60 பில்லியன்) எனக் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here