ஷா ஆலம்:
இங்குள்ள பிரிவு 20 இல் உள்ள ஒரு உணவகத்திற்கு அருகிலுள்ள வடிகால் ஒன்றில் 29 குட்டி ரெட்டிகுலேட்டட் மலைப்பாம்புகளை தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையைச் சேர்ந்த வீரர்கள் பிடித்தனர்.
நேற்று இரவு 9.56 மணியளவில், அப்பகுதியில் பாம்புகளின் நடமாட்டம் தொடர்பில் தங்களுக்கு அழைப்பு வந்ததாக நடவடிக்கை அதிகாரி ரட்சியா ஒஸ்மான் தெரிவித்தார்.
உடனே ஒரு தீயணைப்பு இயந்திரம் மற்றும் ஆறு தீயணைப்பு வீரர்கள் ஏழு நிமிடங்களுக்குப் பிறகு சம்பவ இடத்திற்கு வந்தனர்,” என்று அவர் இன்று தொடர்பு கொண்டபோது கூறினார்.
அவர்கள் வந்ததும், தீயணைப்புப் படையினர் உணவகத்திற்கு அருகிலுள்ள ஒரு வாய்க்காலில் பாம்புகளைக் கண்டதாக அவர் சொன்னார்.
“நாங்கள் இங்கு மொத்தம் 29 மலைப்பாம்புகளைப் பிடித்தோம், ஒவ்வொன்றும் 30-50 செமீ நீளம் கொண்டவை என்றும், பாம்புகள் அவற்றின் அளவைக் கொண்டு வெகு காலத்திற்கு முன்பு குஞ்சு பொரித்திருக்கலாம் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று அவர் கூறினார்.
அந்தப் பகுதியில் இவ்வளவு பாம்புகளைப் பிடிப்பது இது முதல் முறை அல்ல என்ற அவர், கடந்த ஆண்டு இதேபோன்று அதே பகுதியில் இருந்து 26 பாம்புகளை பிடித்ததாக அவர் கூறினார்.
வனவிலங்கு மற்றும் தேசிய பூங்கா துறையின் படி, வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் 2010ன் கீழ் ரெட்டிகுலேட்டட் மலைப்பாம்பு பாதுகாக்கப்படுகிறது.
இயற்கை பாதுகாப்புக்கான அனைத்துலக ஒன்றியத்தின் அடிப்படையில், இந்த வகை பாம்பு உலகிலேயே மிக நீளமானது என்று கூறப்படுகிறது. இதுவரை பதிவு செய்யப்பட்ட மிக நீளமான ரெட்டிகுலேட்டட் மலைப்பாம்பு 10 மீட்டர் நீளம் கொண்டது.
இந்த பாம்புகள் இரண்டு முதல் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே இனப்பெருக்கம் செய்கின்றன, மேலும் ஒரு தடவையில் குறைந்தது 50 முதல் 100 முட்டைகள் வரை அவற்றால் இட்டு, அடைக்காக்க முடியும் என்று கூறப்படுகிறது.