ஒடிசா மாநிலம் கட்டாக்கில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவர், தனது தாய் மற்றும் அத்தையை இருதய நோய் சிகிச்சைக்காக அந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகு அழைத்து வந்தார். அவர்களுக்கு அந்த மருத்துவமனையின் இருதய நோய் பிரிவின் டாக்டரான தில்பக் சிங் தாக்கூர் சிகிச்சை அளித்தார்.
பின்னர் அவர்களுக்கு ஸ்கேன் எடுக்க வேண்டும் என்று கூறி 2 நாள் கழித்து வருமாறு கூறினார். அவர் கூறியபடி அந்த பெண்கள் இருவரும், ஸ்கேன் எடுப்பதற்காக வந்துள்ளனர். இருவரையும், டாக்டர் தாக்கூர் தனி அறைக்கு அழைத்து சென்றார். ஸ்கேன் அறையில் இருந்த பெண் உதவியாளரையும் வெளியே அனுப்பிவிட்டார். அந்த பெண்கள் உறவினரான மருத்துவ மாணவர், சோதனையின் போது அருகில் இருக்க வேண்டும் என்று கோரியபோதும், டாக்டர் அவர்களின் கோரிக்கையை நிராகரித்தார்.
சிறிது நேரத்தில் வெளியே வந்த மாணவியின் தாயும், அத்தையும் தங்களுக்கு உடலில் தாங்கமுடியாத வலி இருப்பதாக கூறினர். அவர்கள் இருவரும் அங்கிருந்த பெண் டாக்டர் ஒருவர் பரிசோதித்தார். அப்போது அவர்கள் இருவரும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இருந்தது தெரியவந்தது. டாக்டர் தாக்கூர் தான் ஸ்கேன் எடுப்பதாக கூறி தங்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர்கள் இருவரும் கூறினர்.
பின்னர் இதுதொடர்பாக போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், டாக்டர் தாக்கூரை கைது செய்தனர். இதனிடையே தன்னை தாக்கியதாக, அந்த பெண்கள் மீதும், அவர்களது உறவினர்கள் மீதும் டாக்டர் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுபற்றியும் விசாரணை நடைபெறுவதாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மருத்துவமனை அதிகாரிகள் பதிலளிக்கவில்லை என்றாலும், மாநில சுகாதாரத் துறையின் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள், சம்பவம் குறித்து விசாரணை செய்து மாநில அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.