லண்டன்:
உலக நாடுகளிடையே குரங்கு அம்மை பரவல் அதிகரித்து வரும் நிலையில், சர்வதேச பொது சுகாதார அவசர நிலையை உலக சுகாதார அமைப்பு பிறப்பித்துள்ளது.
குரங்கு அம்மை என்பது ஒரு அரிய வகை தொற்று நோய். இந்த நோயை எம்பாக்ஸ் என்று அழைக்கின்றனர். இது மனிதர்களுக்கு இடையே எளிதில் பரவாது. நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட விலங்குகளிடமிருந்தே மனிதர்களுக்குப் பரவுகிறது. இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டவர்களில், 10ல் ஒருவர் இறக்க வாய்ப்பு உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொரோனாவைப் போல 2022 முதல் பரவத் தொடங்கிய இந்த நோயானது முதலில் ஆப்ரிக்க நாடுகளில் பாதிப்பு கண்டறியப்பட்டது. தற்போது, மெல்ல மெல்ல 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவத் தொடங்கியது. ஆப்ரிக்க நாடுகளில் மட்டும் 17 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.அவர்களில் 517 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில், இந்தாண்டு 160% இந்த நோய் தொற்றின் பரவல் அதிகரித்துள்ளது.
கடந்த 2022ல் இந்த நோய் பரவத் தொடங்கிய போது, கேரளாவில் மூவருக்கு குரங்கு அம்மை சமீபத்தில் உறுதியானது. இதற்கிடையே, மேற்கு டில்லியைச் சேர்ந்த 34 வயது நபருக்கு குரங்கு அம்மை நோய் உறுதி செய்யப்பட்டது.
குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டோருக்கு முதலில் காய்ச்சல் ஏற்படும். அதன் பின் உடலில் தடிப்புகள் ஏற்படும். இது, முகத்தில் இருந்து உள்ளங்கால் வரை பரவும். தலைவலி, தசை வலி, உடல் சோர்வு உண்டாகும். தொண்டை வலி மற்றும் இருமல் இருக்கும்.
குரங்கு அம்மை பாதிப்பு ஏற்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், உடனடியாக தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். அந்த நேரத்தில் மேற்குறிப்பிட்ட அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும், என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய நாடான டென்மார்க்கைச் சேர்ந்த ஒரு நிறுவனம் தயாரிக்கும், ‘இமான்வேக்ஸ்’ தடுப்பூசி பெரியம்மை நோய்க்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. இதே தடுப்பூசியை குரங்கு அம்மை நோய்க்கும் பயன்படுத்த ஐரோப்பிய யூனியன் ஒப்புதல் அளித்திருந்தது.
குரங்கு அம்மை தொடர்பாக உலக சுகாதார அமைப்பின் பொது டெட்ரோஸ் அதானோம் கேப்ரியேசஸ் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறியதாவது:- குரங்கு அம்மை தொற்று தொடர்பாக அவசரநிலை கமிட்டி என்னை சந்தித்து, தற்போதைய சூழலில் உலக சுகாதார நிலை குறித்த சில அறிவுரைகளை வழங்கினர். அதனை நான் முழுமையாக ஏற்றுக் கொண்டேன்.
உலக அளவில் பொது சுகாதாரத்தின் நிலை அபாயகரமாக உள்ளது. ஆப்பிரிக்க கண்டத்தின் தன்னாட்சி சுகாதார நிறுவனம் நேற்று அவசர நிலையை அறிவித்துள்ளது. இந்த நோய் தொற்றில் மக்களை பாதுகாக்க உலக சுகாதார நிறுவனம், பாதிக்கப்பட்ட நாடுகளுடன் இணைந்து செயல்பட இருக்கிறது, எனக் கூறினார்.