போரில் காயமடைந்த அறுபதுக்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் மலேசியா வந்தடைந்தனர்

சுபாங்: போரில் காயமடைந்த அறுபதுக்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் சுபாங் விமானப்படை தளத்திற்கு வந்தடைந்தனர். இன்று வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 16) மதியம் 2 மணியளவில் இரண்டு அரச மலேசிய ஆகாயப்படைத் தளத்திற்கு  (RMAF) ஏர்பஸ் A-400M விமானங்களில் வந்தனர். தற்காப்பு  அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது காலிட் நோர்டின், மலேசியாவுக்கான பாலஸ்தீன தூதர் வாலிட் அபு அலி, உயர் ராணுவ அதிகாரிகள் ஆகியோர் பாலஸ்தீனியர்களை வரவேற்றனர்.

காயமடைந்த பாலஸ்தீனியர்கள் விமானப்படை தளத்தின் ஹேங்கரில் அமைக்கப்பட்ட கள மருத்துவமனையில் உடனடி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். பின்னர் அவர்கள் வங்சா மஜூவில் உள்ள துவாங்கு மிசான் ஆயுதப்படை மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெறுவார்கள். காயமடைந்த பாலஸ்தீனியர்களை மருத்துவ சிகிச்சைக்காக மலேசியாவிற்கு கொண்டு செல்வதற்காக இரண்டு RMAF விமானங்களும் எகிப்தில் உள்ள அல்மாசா விமானப்படை தளத்திற்கு அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. தற்காப்புத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது காலிட் நோர்டின் இந்த விஷயத்தை உறுதிப்படுத்தினார்.

ஆகஸ்டு 4ஆம் தேதி அன்று, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், பாலஸ்தீன போரில் காயமடைந்தவர்கள், பெண்கள், குழந்தைகள் தஞ்சம் அடைய மலேசியா அனுமதிக்கும் என்று கூறினார். நாங்கள் தொடர்ந்து மனிதாபிமான உதவிகளையும் ஆதரவையும் வழங்குவோம். மேற்கத்திய உலகம் எங்களிடம் இருந்து என்ன எதிர்பார்க்கிறது என்பதைப் பற்றி நாங்கள் கவலைப்படுவதில்லை. எந்த நாட்டுடன் நாம் உறவு கொள்ள வேண்டும் அல்லது கூடாது என்பதை தீர்மானிக்க முயற்சிக்கிறோம் என்று சுதந்திர பாலஸ்தீன கூட்டத்தில் பிரதமர் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here