நாகப்பட்டினம்: நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு கப்பல் போக்குவரத்து தொடங்கியது. புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், நாகை மக்களவை உறுப்பினர் செல்வராஜ், மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் ஆகியோர் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 16) காலை கப்பல் போக்குவரத்தை கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர்.
இருப்பினும், இருபது நாள்களுக்குள் அந்தச் சேவை நிறுத்தப்பட்டது.
வடகிழக்குப் பருவ மழையையும் பயணிகளின் பாதுகாப்பையும் காரணம் காட்டி 2023 அக்டோபர் 23ஆம் தேதி இலங்கைக்கான கப்பல் சேவை நிறுத்தப்பட்டது. அதன் பிறகு அந்தக் கப்பல் சேவையைத் தொடர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் விளைவாக சிவகங்கை என்ற பெயர் கொண்ட கப்பலை சேவையில் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது.
நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறை வரையிலான அந்தக் கப்பலின் சேவை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 16) தொடங்கியது. முன்பதிவு செய்த இலங்கை தமிழர்கள் ஐவர் உட்பட 44 பயணிகள் அந்தக் கப்பலில் சென்றனர். கப்பல் சேவைக்கான நுழைவுச்சீட்டுகளை www.sailindsri.comஎன்ற இணையதள முகவரியில் பதிவு செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நாள்தோறும் நாகையிலிருந்து காலை 8 மணிக்கும் காங்கேசன்துறையிலிருந்து பிற்பகல் 2 மணிக்கும் கப்பல் சேவையாற்றும். கப்பலில் 123 சாதாரண இருக்கைகள், 27 பிரீமியம் இருக்கைகள் உள்ளன.
ஜிஎஸ்டியுடன் சாதாரண இருக்கைக்கு ரூ.5,000, பிரீமியம் இருக்கைக்கு ரூ.7,500 எனக் கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. பயணிகள் 3 மணிநேரத்திற்கு முன்பே துறைமுகத்திற்கு வரவேண்டும் என்றும் 23 கிலோ எடையுள்ள உடைமைகள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும் கப்பல் நிர்வாகம் கூறியுள்ளது.