டேராடூன்: இந்தியா முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் 16 வயது சிறுமியை பேருந்தில் வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொடூரம் அரங்கேறியுள்ளது. இதுகுறித்து பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர் உள்ளிட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மணிப்பூரில் பெண்கள் ஊர்வலம், மேற்கு வங்கத்தில் பயிற்சி மருத்துவர் பாலியல் கொலை, உத்தரப்பிரதேசத்தில் சொந்த மகளையே பாலியல் வன்கொடுமை செய்த அப்பா என்று சமீபகாலமாக நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. அந்த வரிசையில் உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் அதிர்ச்சி சம்பவம் நடந்திருக்கிறது.
கடந்த 13 ஆம் தேதி, டேராடூன் ஐ.எஸ்.பி.டி பேருந்து நிலையத்தில் 16 வயது மதிக்கத்தக்க சிறுமி மயக்க நிலையில் இருப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. காவல்துறை மற்றும் குழந்தைகள் நலக் குழுவினர் அங்கு விரைந்து சிறுமியை மீட்டனர். தொடர்ந்து சிறுமியை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
சிறுமி எதுவும் பேசாமல் தொடர்ந்து அதிர்ச்சி நிலையிலேயே இருந்துள்ளார். இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது அதிர்ச்சி தகவல் கிடைத்தது. அந்த சிறுமி பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர். அவர் டேராடூன் வருவதற்கு முன்பு, டெல்லிக்கும், பின்னர் உத்தரப்பிரதேசம் மாநிலம் மொராடாபாத்துக்கும் பயணம் செய்திருக்கிறார்.
நீண்ட நெடிய பயணம் செய்தாலும், எதற்காக பயணம் செய்தார் என்ற தகவலே சிறுமிக்கு தெரியவில்லை. தொடர்ந்து அவருக்கு மனநல ஆலோசனை வழங்கப்பட்ட பிறகுதான், தன்னை ஒரு கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சி தகவல் வெளியில் வந்துள்ளது.
சிறுமியின் அதிர்ச்சி வாக்குமூலத்தால் மாநிலம் முழுவதும் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது. சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் உத்தரகாண்ட் மாநில மகளிர் ஆணையம் தலைவர் குசும் காண்ட்வாலும் பாதிக்கப்பட்ட சிறுமியை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி உரையாடியுள்ளார்.
பதஅதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த காண்ட்வால், “சம்பவம் குறித்து சிறுமியிடம் பேசியுள்ளோம். மேலும் காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாக அதிகாரிகளிடம் விரிவான அறிக்கை கேட்டுள்ளோம். சிறுமியை கூட்டு பாலியல் செய்த அனைத்து குற்றவாளிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், இந்த சம்பவம் தொடர்பாக போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம். பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்கள், கேஷியர் ஆகிய ஐந்து பேரை கைது செய்து விசாரணை நடத்திக் கொண்டிருக்கிறோம். பேருந்து நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகிறோம்.
பேருந்து சாலையில் ஓடிக்கொண்டிருக்கும்போது, நள்ளிரவு நேரத்தில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. பேருந்து மற்றும் பேருந்து நிலையத்தில் தடயவியல் பிரிவினர் ஆய்வு செய்து ஆதாரங்களை சேகரித்துள்ளோம். அதேபோல சிறுமிக்கு மருத்துவ சோதனையும் நடத்தியுள்ளோம். அதன் முடிவுகள் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். சிறுமியின் பெற்றோருக்கு தகவல் சொல்லிவிட்டோம். அவர்களும் உத்தரகாண்ட் வந்துவிட்டனர் என்று கூறியுள்ளார்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பணிக்கு சென்ற செவிலியர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அதற்கு அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் அதே மாநிலத்தில் அடுத்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.