அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வரும் நவம்பர் மாதம் 5-ந்தேதி நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் (வயது 78)போட்டியிடுகிறார். அதே சமயம், ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் ஜனாதிபதி ஜோ பைடன் (81) வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
ஆனால் வயோதிகம் உள்ளிட்ட காரணங்களால் தேர்தல் போட்டியில் இருந்து ஜோ பைடன் விலக வேண்டும் என சொந்த கட்சியிலேயே அவருக்கு எதிர்ப்புகள் வலுத்தன. பின்னர்தேர்தல் போட்டியில் இருந்து ஜோ பைடன் விலகினார். அதனை தொடர்ந்து ஜனநாயக கட்சி வேட்பாளராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும், துணை அதிபருமான கமலா ஹாரிஸ் (59) அறிவிக்கபட்டார். அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமா உள்பட, கட்சியின் பல்வேறு மூத்த தலைவர்கள் கமலா ஹாரிசுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
இந்த நிலையில், ஜோ பைடனை விட கமலா ஹாரிசை தோற்கடிப்பது தனக்கு மிகவும் எளிது என டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பென்சில்வேனியாவில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் டிரம்ப் பேசியதாவது;-
ஜோ பைடனை விட கமலா ஹாரிசை தோற்கடிப்பது மிகவும் எளிதானது என நம்புகிறேன். பல முக்கியமான கொள்கைகளை வகுப்பதில் கமலா ஹாரிஸ் தீவிர இடதுசாரியைப் போல் நடந்து கொள்கிறார். அவர் சிரிப்பதை நீங்கள் கேட்டிருக்கிறீர்களா? அது ஒரு முட்டாளின் சிரிப்பைப் போல் இருக்கும். கமலா ஹாரிசை விட நான் அழகாக இருக்கிறேன் என்று அவர் பேசினார்.