67 ஆண்டுகால மலேசியா-இந்தியா உறவுகளை வலுப்படுத்த இந்தியா சென்றடைந்த அன்வார்

புதுடெல்லி: 67 ஆண்டுகால மலேசியா-இந்தியா உறவுகளை வலுப்படுத்தவும், எதிர்காலத்திற்கான பல துறை ஒத்துழைப்பு நிகழ்ச்சி நிரலை நிறுவவும் மூன்று நாள் அதிகாரப்பூர்வ பயணமாக பிரதமர் அன்வார் இப்ராஹிம் நேற்றிரவு இந்தியா சென்றடைந்தார்.  அன்வாரை ஏற்றிச் சென்ற சிறப்பு விமானம், உள்ளூர் நேரப்படி இரவு 9.47 மணிக்கு (மலேசியாவில் நள்ளிரவு 12.17 மணிக்கு) புது டில்லி விமானப்படை நிலையத்தில் தரையிறங்கியது.

அன்வாருடன் வெளியுறவு அமைச்சர் முகமது ஹசன், முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் தெங்கு ஜஃப்ருல் அஜீஸ், சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சர் தியோங் கிங் சிங், டிஜிட்டல் அமைச்சர் கோபிந்த் சிங் தியோ மற்றும் மனித வளத்துறை அமைச்சர் ஸ்டீவன் சிம் ஆகியோர் சென்றிருக்கின்றனர்.

அன்வாரை வரவேற்க, ரயில்வே துறைக்கான இந்திய இணை அமைச்சர் வி.சோமன்னா, இந்தியாவுக்கான மலேசிய உயர் ஆணையர் முசாபர் ஷா முஸ்தபா மற்றும் மலேசியாவுக்கான இந்திய உயர் ஆணையர் பி.என். ரெட்டி ஆகியோர் அங்கிருந்தனர். நவம்பர் 2022ஆம் ஆண்டு பிரதமராக பதவியேற்ற பிறகு இந்தியாவுக்கு தனது முதல் அதிகாரப்பூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள அன்வார், இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கிறார்.

இந்த சந்திப்பு இரு தலைவர்களுக்கும் தற்போதைய ஒத்துழைப்பை மறுபரிசீலனை செய்வதற்கும், 2015 இல் மேம்படுத்தப்பட்ட தகவல் தொடர்பு கூட்டாண்மைக்கு உயர்த்தப்பட்ட மலேசியா-இந்தியா உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான முன்முயற்சிகளை ஆராய்வதற்கும் வாய்ப்பளிக்கும். அன்வாரும் அவரது தூதுக்குழுவும் இந்திய தொழில்துறை தலைவர்களுடனான வட்டமேசை சந்திப்பிலும் பங்கேற்பார்கள்.

2023 இல், இரு நாடுகளுக்கும் இடையிலான மொத்த வர்த்தகம் 76.62 பில்லியன் ரிங்கிட்டாக இருந்தது. மலேசியா 15.89 பில்லியன் ரிங்கிட் உபரி வருவாயை  பெற்றது. 2023 ஆம் ஆண்டில், ஆசியான் உறுப்பு நாடுகளில் இந்தியாவின் மூன்றாவது பெரிய வர்த்தக பங்காளியாக மலேசியா இருந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here