திரிபுரா வெள்ளம்: 65,000 பேர் முகாம்களில் தஞ்சம்

அகர்தலா: திரிபுராவில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் தொடர் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி குறைந்தது 23 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வெள்ளத்தில் இருந்து தப்பிக்க 65,000க்கும் மேற்பட்டவர்கள் இருப்பிடங்களைவிட்டு முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் இந்த வார தொடக்கத்தில் இருந்து மழை பெய்து வருகிறது. இதனால் பல பகுதிகளில் நிலச்சரிவு,வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த மழையால் இதுவரை மாநிலம் முழுவதும் 170,000 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி குறைந்தது 23 பேர் உயிரிழந்ததாக அம்மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த எண்ணிக்கை அடுத்த சில நாள்களில் அதிகரிக்கலாம் என்றும் அதிகாரிகள் அச்சம் தெரிவித்தனர்.

மேலும் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 450 நிவாரண முகாம்களில் 65,000க்கும் மேற்பட்ட மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், அகர்தலாவை சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கித் தவித்த மக்களுக்கு விமானம் மூலம் உணவு, அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மாநிலம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த 10 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா அறிவித்துள்ளார். முன்னதாக கனமழையால் 12 பேர் உயிரிழந்ததாகவும், இரண்டு பேரை காணவில்லை என்றும் வருவாய்த் துறை செயலர் பிரிஜேஷ் பாண்டே தெரிவித்திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here