சென்னை: அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் சையது (உண்மைப் பெயர் இல்லை). இவர் தனது குடும்பத்தினருடன் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் வசித்து வருகிறார். இவரது 13 வயது மகள் ஆகஸ்ட் 20ஆம் தேதி வீட்டில் தாயாரிடம் கோபம் கொண்டு, திருவனந்தபுரம் ரயில் நிலையம் வந்தார். அங்கிருந்து ரயிலில் நாகர்கோவில் வந்தடைந்தார்.
சிறுமி காணாமல் போனது குறித்து கன்னியாகுமரி காவல்துறைக்கு திருவனந்தபுரம் காவல்துறையினர் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து சென்னை, விழுப்புரம், திருச்சி, மதுரை என பல ரயில் நிலையங்களில் உள்ள தமிழக ரயில்வே காவல்துறையினருக்கு சிறுமியின் படத்துடன் தகவல் அனுப்பப்பட்டது.
இறுதியில், விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் அந்தச் சிறுமி புதன்கிழமை இரவு மீட்கப்பட்டார். இதேபோல, சென்னை விநாயகபுரத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி,தனது தோழியுடன் இன்ஸ்டகிராம் மூலம் பழகிய காதலனைத் தேடி கடந்த ஆகஸ்ட் 11ஆம் தேதி வீட்டிலிருந்து காணாமல் போனார். அதைத்தொடர்ந்து புழல் காவல் நிலையத்தில் சிறுமியின் தந்தை புகார் அளித்தார்.
இதுகுறித்து ரயில்வே காவல்துறையினரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், கோயம்புத்தூர் ரயில் நிலையத்தில் சிறுமியும் அவரது தோழியும் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து ரயில்வே காவல்துறையினர் விரைந்து சென்று இருவரையும் மீட்டனர். தொடர்ந்து, புழல் காவல் நிலையத்துக்குத் தகவல் அளிக்கப்பட்டு, சிறுமி, அவரது தோழி இருவரும் அவர்கள் வீட்டில் ஒப்படைக்கப்பட்டனர். சிறுமியர் இருவர் உட்பட மூன்று பேரை மீட்ட ரயில்வே காவல்துறையினருக்கு பாராட்டுகள் குவிந்தன.