அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வரும் நவம்பர் மாதம் 5-ந்தேதி நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் (வயது 78)போட்டியிடுகிறார். அதே சமயம், ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் ஜனாதிபதி ஜோ பைடன் (81) வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
ஆனால் வயோதிகம் உள்ளிட்ட காரணங்களால் தேர்தல் போட்டியில் இருந்து ஜோ பைடன் விலக வேண்டும் என சொந்த கட்சியிலேயே அவருக்கு எதிர்ப்புகள் வலுத்தன. பின்னர்தேர்தல் போட்டியில் இருந்து ஜோ பைடன் விலகினார். அதனை தொடர்ந்து ஜனநாயக கட்சி வேட்பாளராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும், துணை அதிபருமான கமலா ஹாரிஸ்(59) அறிவிக்கபட்டார்.
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமா உள்பட, கட்சியின் பல்வேறு மூத்த தலைவர்கள் கமலா ஹாரிசுக்கு ஆதரவு தெரிவித்தனர். தற்போது கமலா ஹாரிஸ்தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.இந்த நிலையில், பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத் கடந்த 2009-ம் ஆண்டு ‘எக்ஸ்'(டுவிட்டர்) தளத்தில் கமலா ஹாரிஸ் குறித்து வெளியிட்ட பதிவு ஒன்று தற்போதுவைரலாக பரவி வருகிறது. அந்த பதிவை பார்த்த பலரும், மல்லிகா ஷெராவத்திற்கு எதிர்காலத்தை கணித்து கூறும் சக்தி இருக்கிறது என்று பதிவிட்டு வருகின்றனர்.
தற்போது 47 வயதாகும் நடிகை மல்லிகா ஷெராவத், பாலிவுட்டில் ‘மர்டர்’, ‘வெல்கம்’, ‘குரு’ உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் ‘தசாவதாரம்’, ‘ஒஸ்தி’, ‘பாம்பாட்டம்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள இவர், கடந்த 2011-ம் ஆண்டு வெளியான ‘பாலிடிக்ஸ் ஆப் லவ்’ என்ற ஆங்கில படத்தில் நடித்திருந்தார்.
அந்த படத்தில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவின் பிரசார ஊழியராக மல்லிகா ஷெராவத் நடித்திருந்தார். அந்த கதாபாத்திரம் கமலா ஹாரிசை தழுவி உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே, கடந்த 2009-ம் ஆண்டு மல்லிகா ஷெராவத், ‘எக்ஸ்’ தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், “ஒருநாள் அமெரிக்காவின் ஜனாதிபதியாகும் வாய்ப்பை கொண்டவர் என்று சிலரால் கூறப்படும் கமலா ஹாரிஸ் என்ற பெண்ணுடன், ஆடம்பரமான ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார். பெவர்லி ஹில்ஸ் பகுதியில் நடைபெற்ற ஒரு நிதி திரட்டும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது கமலா ஹாரிசை மல்லிகாஷெராவத் சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.