கெஜ்ரிவாலை சிறையிலேயே வைத்திருக்க பா.ஜ., சதி: ஆம் ஆத்மி பகிரங்க குற்றச்சாட்டு

புதுடில்லி:

‘முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையிலேயே அடைத்து வைத்திருக்க பா.ஜ., மற்றும் மத்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ., ஆகியவை சதி செய்துவ் வருகின்றன’ என, ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

இதுகுறித்து, ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் மணீஷ் சிசோடியா மற்றும் அமைச்சர் அதிஷி சிங் ஆகியோர் கூறியதாவது:

முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமின் மனுவுக்கு பதில் அளிக்க உச்ச நீதிமன்றத்தில் சி.பி.ஐ., அவகாசம் கேட்டுள்ளது. பதில் மனு தயாராகவில்லை என்றும், அதனால் ஜாமின் மீதான விசாரணையை 14 நாட்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்றும் சி.பி.ஐ., கூறியுள்ளது.

அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையிலேயே அடைத்து வைத்திருக்க பா.ஜ., அறிவுறுத்தல்படி பொம்மை போல சி.பி.ஐ., அதிகாரிகள் ஆடுகின்றனர். ஆனால், பா.ஜ.,வின் சதித்திட்டங்கள் தோல்வி அடையும். உண்மையும் நேர்மையும் ஒரு நாள் வெல்லும். விசாரணை அமைப்புகள் அரசியல் தாளத்துக்கு நடனமாடலாம். அதேநேரத்தில், அரசியலமைப்பும் நீதியும் இருப்பதை மறந்து விடக்கூடாது.

எவ்வளவு முயற்சி செய்தாலும் இறுதியில் உண்மையே வெல்லும் என்பதை பா.ஜ.,வுக்கு கூற விரும்புகிறேன். சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை கடும் முயற்சி செய்தும், உச்ச நீதிமன்றம் மணீஷ் சிசோடியாவுகு ஜாமின் வழங்கியது.

அதேபோல, முதல்வர் கெஜ்ரிவாலும் சிறையிலிருந்து விரைவில் வெளியே வருவார் என்று அவர்கள் கூறினர்.

சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கில் ஜூலை 11ல் கெஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. ஆனால், ஜூன் 26ல் மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் சி.பி.ஐ., அதிகாரிகள் கெஜ்ரிவாலை கைது செய்தனர். இந்த வழக்கில் கெஜ்ரிவால் தாக்கல் செய்த ஜாமின் மனுவுக்கு பதில் அளிக்க சி.பி.ஐ.,க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால், பதில் மனு தாக்கல் செய்ய சி.பி.ஐ., அவகாசம் கேட்டதையடுத்து, செப்டம்பர் 5ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here