மாணவர்களின் குறும்பால் 25 பேர் மயக்கம்

திருப்பதி: ஆந்திர மாநிலம், பாபட்லா மாவட்டம், சூர்யா லங்கா பகுதியில் கேந்திரிய வித்யாலயா பள்ளி இயங்கி வருகிறது.

சனிக்கிழமை காலை 6ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளியில் உள்ள அறிவியல் ஆய்வகத்தில் ஆராய்ச்சி வகுப்பு நடந்தது. அப்போது அறிவியல் ஆசிரியர் குளோரோபில் மற்றும் எலுமிச்சை, உப்பு கரைசல் மூலம் பரிசோதனை செய்து மாணவர்களுக்கு காண்பித்தார். சில மாணவர்கள் குறும்புத்தனமாக ஆசிரியர் செய்து காண்பித்த கரைசலுடன் காப்பித்தூள், சர்க்கரை, உப்பு, கிருமி நாசினி போன்றவற்றை கலந்தனர்.

அப்போது மாணவர்கள் செய்த கலவையில் இருந்து திடீரென நச்சுவாயு உருவாகி ஆய்வகம் முழுவதும் புகையானது. புகை அருகில் இருந்த வகுப்பறைக்குள் சென்றது. நச்சுவாயுவை சுவாசித்த 25 மாணவர்கள் மயக்கமடைந்து கீழே விழுந்தனர். அதைத் தொடர்ந்து ஆசிரியர்கள், மாணவர்களை மீட்டு சிகிச்சைக்காக விமானப்படைத்தள மருத்துவமனையில் சேர்த்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர் வெங்கட் முரளி சம்பவ இடத்திற்கு சென்று மாணவர்களிடம் விசாரணை நடத்தினார். மருத்துவமனையில் மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு 23 மாணவர்கள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். 2 மாணவர்கள் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில்   இருந்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here