சென்னை: திரைப்பட நகைச்சுவை நடிகரான பிஜிலி ரமேஷ் உடல்நலக்குறைவால் காலமானார். மாலை ஐந்து மணி அளவில் நடைபெற்ற இறுதி நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக வி ஜே சித்து வந்திருந்தார். இதைத்தொடர்ந்து பிஜிலி ரமேஷ் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி விட்டு, மனைவி மற்றும் மகனுக்கு ஆறுதல் கூறினார்.
யூடியூப் சேனலின் பிராங்க் நிகழ்ச்சி ஒன்றின் மூலம் பிரபலமானார் நடிகர் பிஜிலி ரமேஷ். அதைத்தொடர்ந்து இவருக்கு திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்க அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்டு சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். பின், 2019 ஆம் ஆண்டு ஹிப்பாப் ஆதி நடிப்பில் வெளியான ‘நட்பே துணை’ திரைப்படத்தில் முகம் தெரியும் அளவிற்கு ஒரு கதாபாத்திரத்தில் நடித்தார்.
பின் ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள், அமலாபாலின் ஆடை, ஜெயம் ரவியின் கோமாளி உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி சீசன் 1 நிகழ்ச்சியிலும் கோமாளியாக கலந்து கொண்டார். அதன் பிறகு பெரியதாக எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை.
உயிரிழந்தார்: இந்நிலையில், பிஜிலி ரமேஷ் கடந்த மாதமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதைத்தொடர்ந்து ஒருவாரத்திற்கு முன் வீடு திரும்பிய பிஜிலி ரமேஷ் இன்று அதிகாலை தூக்கத்திலேயே உயிரிழந்தார்.
அவருக்கு கல்லீரல் பாதிக்கப்பட்டதை அடுத்து மருத்துவர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று தெரிவித்ததாகவும், ஆனால், தற்போது அவர் மோசமான கட்டத்தில் இருப்பதால், ஆப்ரேஷன் செய்ய முடியாது என்று மருத்துவர்கள் கைவிரித்துவிட்டதாக அவரது மனைவி தெரிவித்துள்ளார்.