ஜூன் 13 அன்று அந்த விண்கலம் திரும்பியிருக்க வேண்டும். ஆனால் அதில் சென்ற சுனிதா வில்லியம்ஸும் மற்றொரு அமெரிக்க விண்வெளி வீரரான புச் வில்மோர் என்பவரும் 2025 பிப்ரவரி வரை பூமிக்குத் திரும்புவது சாத்தியமில்லை. அதுவரை பூமியிலிருந்து 400 கி.மீ உயரத்தில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தில்தான் அவர்கள் இருந்தாக வேண்டும். எட்டு நாள் என்று திட்டமிட்ட பயணம் எட்டு மாதங்களுக்கு மேற்பட்ட பயணமாகிவிட்டது.
வணிக நோக்கில் வருங்காலத்தில் விண்வெளிக்கு விண்கலங்களை அனுப்புவதற்கான சோதனை முயற்சியாக போயிங் உருவாக்கிய ஸ்டார்லைனர் விண்கலத்தை நாசா அனுப்பியது. அந்த விண்கலத்தின் ஐந்து உந்துபாகங்கள் (Thrusters) சரியாகச் செயல்படவில்லை. விண்கலத்துக்கு வந்து சேர வேண்டிய ஹீலியம் வாயு கசிந்து வெளியேறிக்கொண்டிருக்கிறது. அதை சரிசெய்ய தரையிலிருந்து மேற்கொண்ட முயற்சிகள் பலன் தரவில்லை. எனவே, பாதுகாப்புக் காரணங்களுக்காக அதில் அவர்கள் திரும்ப முடியவில்லை.
சுனிதா, வில்மோர் ஆகியோர் பல விண்வெளித் திட்டங்களில் பங்கேற்றவர்கள், அனுபவசாலிகள். அவர்களுக்கு ரிஸ்க் எடுப்பது ரஸ்க் சாப்பிடுவது போல். சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்குவது சுனிதா வில்லியம்ஸுக்குப் புதிதல்ல. தனது இரண்டு பயணங்களில் அவர் மொத்தமாக 321 நாள்கள் அங்கு தங்கியிருக்கிறார்.