கோலாலம்பூர்:
பயணிகளை ஏற்றுவதற்காக சென்று கொண்டிருந்த சுற்றுலா பேருந்து ஒன்று, திடீரென்று ஏற்பட்ட தீயால் முற்றாக கருகி நாசமானது.
கிள்ளான் மேருவில் பயணிகளை ஏற்றுவதற்காக, புஞ்சாக் பெர்டானாவிலிருந்து அந்தப் பேருந்து செல்லும் வழியில் நேற்று பிற்பகல் 3 மணியளவில் அதில் தீப்பிடித்தது.
பேருந்தின் பின்புறத்திலிருந்து திடீரென்று நெருப்பு எரியும் வாடை ஏற்பட்டதைத் தொடர்ந்து குபுகுபுவென்று அடர்த்தியான புகையும் கிளம்பியதைக் கண்ட பேருந்து ஓட்டுநர் அந்தப் பேருந்தை அவசரமாக சாலையோரத்தில் நிறுத்தினார். சிறிது நேரத்திற்குள் அந்தப் பேருந்து முழுவதும் திகுதிகுவென தீப்பற்றி எரியத் தொடங்கி விட்டது.
தகவலறிந்து அங்கு விரைந்து வந்த தீயணைப்பு மீட்பு துறையினர் தீயை விரைந்து அணைத்தனர். இதில் யாருக்கும் உயிருடற்சேதம் ஏற்படவில்லை என்று ஷா அலாம் மாவட்ட காவல்துறைத் துணைத் தலைவர் சுப்ரிண்டெண்டன்ட் ராம்சே அனாக் எம்போல் தெரிவித்தார்.