கொல்கத்தா மருத்துவமனையை சுற்றும் மர்மங்கள்.. சந்தீப் கூறிய தகவல்கள் – பின்னணி என்ன?

கொல்கத்தா: கொல்கத்தா பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக நாளுக்கு நாள் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியாகி வருகின்றன. மருத்துவமனையின் முன்னாள் முதல்வரிடம் பதினெட்டு நாள்கள் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரண்டு முறை உண்மை கண்டறியும் சோதனையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் இரண்டாமாண்டு முதுநிலை மருத்துவம் பயின்று வந்த பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது. மருத்துவரைப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாகக் கூறப்படும் சஞ்சய் ராய் விட்டுச் சென்ற புளூடூத் மூலம் அடையாளம் காணப்பட்டு, போலீஸார் அவரை கைது செய்துள்ளனர்.

கொலை சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து நாட்டின் பல பகுதிகளிலும் மருத்துவர்கள் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. உயிரிழந்த பெண் மருத்துவரின் தலை, முகம், கழுத்து, கைகள், பெண்ணுறுப்பு என 14 இடங்களில் கொடூர காயங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதிபயங்கர தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், கழுத்து நெறிக்கப்பட்டதில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு பெண் உயிரிழந்துள்ளார்.

கைது செய்யப்பட்ட சஞ்சய் ராய் மிகவும் வக்கிரமானவராகவும், ஆபாசத்துக்கு அடிமையாகியும் உள்ளார். அவருக்கு விலங்கு போன்ற உள்ளுணர்வு உள்ளது தெரியவந்துள்ளது. அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், மருத்துவரின் கொடூர கொலை குறித்து அவருக்கு எந்தவிதமான வருத்தமும் இல்லை. கொஞ்சம்கூட அச்சம்பவத்துக்கு அவர் மனம் வருந்தவில்லை. அங்கு நடந்த ஒவ்வொரு நிமிட சம்பவம் குறித்தும் தெளிவாக விவரித்துள்ளார் என்று சிபிஐ அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

இந்த வழக்கை சிபிஐ தொடர்ந்து விசாரணை செய்து வருகிறது. மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷிடம் சிபிஐ அதிகாரிகள் 18 நாள்கள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின்போது இரண்டு முறை உண்மை கண்டறியும் சோதனையும் நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், சந்தீப் கோஷ் கூறிய சில தகல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து சந்தீப் கூறியதாக வெளியாகியுள்ள தகவலில், பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட தினத்தன்று நெஞ்சக நோய் பிரிவு உதவிப் பேராசிரியர் சுமித் ராய் காலை 10 மணியளவில் எனது செல்போனுக்கு அழைத்தார். நான் அப்போது குளித்துக் கொண்டிருந்தேன். அதனால், போனை எடுக்கவில்லை. 10.20 மணிக்கு நான் அவரை அழைத்தபோது தான் சம்பவம் குறித்து தகவல் தெரியவந்தது. பின்னர், மருத்துவமனைக்கு விரைந்து சென்றேன். காவல் நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தேன். ஆனால், நான் தகவல் அளிக்கும் முன்பே மருத்துவமனையில் இருந்து காவல் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனைக்கு 11 மணிக்குச் சென்றேன். அப்போது, சம்பவ இடத்துக்குள் செல்லக் கூடாது என கேட்டுக் கொண்டனர் என தெரிவித்துள்ளார். இந்நிலையில், மருத்துவமனைக்கு சம்பந்தமே இல்லாத ஆட்கள் நிறைய பேர் மருத்துவமனையில் இருந்தது அதிகாரிகளுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பெண்ணின் பெற்றோருக்கும் லேட்டாகவே தகவல் தெரிவித்துள்ளனர். தற்கொலை என்றும் கூறியுள்ளனர். தற்கொலை என்று சொல்ல அவர்களை அறிவுறுத்தியது யார் என பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.

அதேசமயம், போலீஸார் மருத்துவமனைக்குள் வந்தபோது சந்தீப் கோஷ் ஏன் அங்கு இல்லை. மருத்துவமனை நிர்வாகத்துடன் போலீஸார் பேசியது ஏன் என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, சந்தீப் கோஷுக்கு மேலும் சில உண்மை கண்டறியும் சோதனை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். அதேபோல, சஞ்சய் ராயும் இதுவரை மருத்துவமனைக்கு நிர்வாகத்துக்கு எதிராக எதுவும் பேசவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here