அமராவதி: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, மதுரா நகர் ரயில்வே பாலம் மீது ஏறி வெள்ள பாதிப்புகளைப் பார்வையிட்டுக்கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக அவர் இருந்த பாலத்தின் மீது வேகமாக ரயில் கடந்துசென்றது. நல்ல வேளையாக, மேம்பாலத்தின் ஓரத்தில் நின்றுக்கொண்டிருந்த சந்திரபாபு நாயுடு உயிர் தப்பினார்.
விஜயவாடாவில் வெள்ள பாதிப்புகளை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு செப்டம்பர் 5ஆம் தேதி மாலை பார்வையிட்டுக்கொண்டிருந்தார். அப்போது, மதுராநகர் ரயில் பாலம் மீது ஏறி, கீழே ஓடிக்கொண்டிருக்கும் வெள்ளத்தை சில அதிகாரிகளுடன் பார்வையிட்டார்.
அந்த ரயில் பாலமானது, ரயில் மட்டும் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. மேம்பாலத்தின் ஓரத்தில் மிகக் குறைந்த இடைவெளியே இருக்கும். இந்நிலையில், சந்திரபாபு நாயுடு நடந்து சென்றுகொண்டிருந்தபோது, அந்த மேம்பாலத்தில் திடீரென ரயில் ஒன்று வேகமாக வந்தது. உடனடியாக அவரது பாதுகாவலர்கள் சந்திரபாபு நாயுடுவை பாலத்தின் ஓரத்தில் இழுத்து நிறுத்தினர். மிகக் குறுகிய இடைவெளியில், வேகமாக வந்த ரயில் அனைவரையும் கடந்து சென்றது.
பாதுகாப்பு விதிமுறைகளை எல்லாம் உடைத்துவிட்டு, கடந்த ஐந்து நாள்களுக்கும் மேலாக சந்திரபாபு நாயுடு வெள்ளம் பாதித்த பகுதிகளைப் பார்வையிட்டு வருகிறார். அந்த வகையில், வியாழக்கிழமை, முன்னெச்சரிக்கை இல்லாமல், ரயில் பாலத்தின் மீதேறி தண்டவாளம் வழியாக அவர் நடந்து சென்றபோது இந்தச் சம்பவம் நேர்ந்துள்ளது.