கோலாலம்பூர்:
மரக் கிளைகளை வெட்டுவதற்காக மரத்தில் ஏறிய ஆடவர் மீது மரக்கிளை விழுந்ததால் சிக்கிக்கொண்ட அவரை மரத்திலிருந்து மீட்டு கீழே இறக்க தீயணைப்பு, மீட்பு நிலைய உதவி நாடப்பட்டது.
35 வயதான அந்த ஆடவர் சிக், ஸ்ரீ டூசுன் ஆரம்ப பள்ளிக்கு பின்புறத்தில் மரக் கிளைகளை வெட்டுவதற்காக வந்தார்.
மரத்தின் மீதேறி கிளைகளை வெட்டத் தொடங்கிய சமயத்தில் அந்நபரின் மீது அவர் வெட்டிய மரக் கிளை முறிந்து விழுந்தது. பற்றாக்குறைக்கு அவரது கால்களும் கிளைகளுக்கு இடையில் சிக்கிக் கொண்டதால் அவரால் மரத்திலிருந்து இறங்க கூட முடியாமல் வேதனையில் துடித்தார்.
நேற்று மாலை 5.50 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்தது.
சம்பவத்தின் போது அங்கு அடைமழை பெய்து கொண்டிருந்தது. அவரை மரத்திலிருந்து இறக்குவதற்கு பள்ளித் தரப்பினர் தீயணைப்பு, மீட்பு நிலையத்தின் உதவியை நாடினர்.
விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மரக்கிளைகளை வெட்டி அப்புறப்படுத்திவிட்டு, 10 நிமிட போராட்டத்திற்குப் பின்னர் அந்நபரைக் கீழே இறக்கினர்.
உடனடியாக அந்நபர் சிகிச்சை க்காக சிக் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.