டாக்கா:
‘ஷேக் ஹசீனாவை இந்தியாவில் இருந்து எங்கள் நாட்டுக்கு நாடு கடத்த வேண்டும்’ என வங்கதேச அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
இட ஒதுக்கீடு தொடர்பாக, வங்கதேச மாணவர்கள் நடத்திய போராட்டம் வன்முறையில் முடிந்தது. நிலைமையை கட்டுப்படுத்த முடியாத ஷேக் ஹசீனா, பிரதமர் பதவியை ராஜினாமா செய்து விட்டு, நாட்டை விட்டு வெளியேறினார். பிழைத்தால் போதும் என்ற ரீதியில் இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளார் ஷேக் ஹசீனா. வங்கதேசத்தில் அமைதியை கொண்டு வரும் முயற்சியாக இடைக்கால அரசு பொறுப்பேற்றுள்ளது.
ஹசீனா ஆட்சியில் நடந்த குற்றங்கள் தொடர்பாக, அந்நாட்டு கோர்ட்டில் விசாரணை தொடங்கியுள்ளது. அதிலும் குறிப்பாக, மாணவர் போராட்டத்தின் போது, ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 5 வரை நடந்த குற்றங்களின் அடிப்படையில் ஹசீனா மற்றும் 9 பேர் மீது விசாரணை நடத்தப்படுகிறது.
இந்த வழக்கில் விசாரிப்பதற்காக, ஷேக் ஹசீனா தேவைப்படுவர்; எனவே, அவரை இந்தியாவிலிருந்து நாடு கடத்த தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என புதிதாக நியமிக்கப்பட்ட தலைமை வழக்கறிஞர் எம்.டி தாஜுல் இஸ்லாம் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியதாவது: மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக பதியப்பட்ட வழக்குகள் தொடர்பாக ஷேக் ஹசீனாவுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்க சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தில் விண்ணப்பம் தாக்கல் செய்வோம்.
புதிய வழக்குகளை விசாரிப்பதற்கான சட்டத்தில் திருத்தம் செய்வது குறித்து அரசாங்கத்துடன் கலந்தாலோசித்த பிறகு முடிவு எடுக்கப்படும். குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு எதிரான தகவல்கள், ஆவணங்கள் மற்றும் ஆதாரங்கள் நாடு முழுவதிலும் இருந்து சேகரிக்கப்பட்டு தீர்ப்பாயத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றார்.
நோபல் பரிசு பெற்ற முஹம்மது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு அமைக்கப்பட்ட பிறகு, முந்தைய அரசு நியமித்த வழக்குரைஞர் குழு மற்றும் விசாரணை அமைப்பு பதவி விலகி விட்டனர். புதிய நீதிபதிகள் மற்றும் புலனாய்வாளர்களை நியமித்து விசாரிக்க வேண்டும் என்றும் அரசியல் கட்சியினர் கோரியுள்ளனர்.
வங்கதேசத்தில் நடந்த வன்முறையில், 1,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர் என்று இடைக்கால அரசாங்கத்தின் சுகாதார ஆலோசகர் நூர்ஜஹான் தெரிவித்தார்.