டேராடூன்:
உத்தரகண்ட் நிலச்சரிவில் சிக்கித் தவித்த 30 தமிழர்களும் பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளனர்.
கடந்த 1ம் தேதி கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து 30 பேர் கொண்ட ஒரு குழுவினர் உத்தரகாண்டில் உள்ள ஆதிகைலாஷ் கோயிலுக்கு ஆன்மிக சுற்றுலா சென்றுள்ளனர். ஆதிகைலாஷ் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு அங்கிருந்து திரும்பிக் கொண்டு இருந்தனர்.
அப்போது கோயிலில் இருந்து 18 கி.மீ., தொலைவில் நிலச்சரிவு ஏற்பட 30 பேரும் அங்குள்ள ஆசிரமப்பகுதியில் தங்கினர். நிலச்சரிவு காரணமாக அங்குள்ள சாலை துண்டிக்கப்பட்டதால் அவர்கள் அனைவரும் வெளியேற முடியாமல் சிக்கித் தவித்தனர்.
இந்நிலையில் 30 பேரும் பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு இருந்தார். அதன்படி அவர்களை மீட்கும் பணி தொடங்கியது. முதல் கட்டமாக 15 பேரும், அடுத்த கட்டமாக எஞ்சிய 15 பேரும் என மொத்தம் 30 பேரும் ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளதாக உத்தரகண்ட் மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அனைவரும் விமானம் மூலம் வெகு விரைவில் சென்னை அழைத்து வர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.