புதிதாகப் பிறந்த இரண்டு குழந்தைகளை, மருத்துவமனை ஒன்று மாற்றிக் குழந்தைகளின் குடும்பங்களுக்குக் கொடுத்துவிட்டது.
இருப்பினும், அதில் ஒரு குழந்தையின் தந்தை மருத்துவமனையின் தவற்றை உடனே கண்டறிந்துவிட்டார்.
தாய்லாந்தின் மருத்துவமனை ஒன்றில் இந்தப் பெரும் தவறு நடந்துள்ளதுகுழந்தை மாறியதை அறிந்த அந்த தந்தை உடனே மருத்துவர்களை நாடியதாக ‘சேனல் 3’ குறிப்பிட்டது.தமக்குப் பெண் குழந்தை ஆகஸ்ட் 11ஆம் தேதி பிறந்ததாகவும் சுவாசப் பிரச்சினை காரணமாக குழந்தை அம்மாவிடம் இல்லாமல் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து வந்ததாகவும் அந்த தந்தை ஆகஸ்ட் 24ஆம் தேதி சமூக ஊடகங்களில் பதிவிட்டார்.
அன்றுதான் தமது குழந்தையிடம் பெரும் மாற்றங்களை அந்த தந்தை கண்டுபிடித்தார்.குழந்தையின் முகம் மாறியிருந்ததுடன் அதன் தலைமுடி நீளமும் குறைந்திருந்தது. அத்துடன் மொத்தமாக இருந்த புருவங்களைக் காணவில்லை.குழந்தையின் பெயர் கொண்ட மணிக்கட்டுப் பட்டையையும் காணவில்லை.
குழந்தையின் தந்தை பதறிப்போய் மருத்துவமனைப் பணியாளரிடம் இது தொடர்பாக கேட்க, குழந்தையின் குளியலின்போது அந்தப் பட்டை எங்கோ தவறுதலாக விழுந்திருக்கலாம் என்று அந்தப் பணியாளர் சமாதானப்படுத்தினார்.
அதையடுத்து குழந்தையை 18ஆம் தேதி வீட்டுக்குக் கொண்டு சென்றார் அந்த தந்தை. இருப்பினும், வீட்டிற்குக் கொண்டுவந்தது தமது மகள் அல்ல என்ற உணர்வை அந்த தந்தையால் கைவிட முடியவில்லை.
மருத்துவமனையுடன் அவர் தொடர்புகொண்டு மீண்டும் கேட்க, புதிதாகப் பிறக்கும் குழந்தைகளின் முகத்தில் தினமும் மாற்றம் இருக்கும் என்று மருத்துவமனை கூறிற்று.இறுதியில், நண்பர்கள் வற்புறுத்தியதால் அந்த தந்தை 21ஆம் தேதி மருத்துவமனைக்குத் தம் மனைவியுடன் சென்று ரத்தப் பரிசோதனை வேண்டும் என்று கோரினார்.
குழந்தை அவர்களுடையது அல்ல என்று பரிசோதனையில் உறுதியானது.
கோபமும் கவலையும் அந்த தந்தையை ஆட்கொண்டன. தம் மகள் எங்கே என்று அவர் மருத்துவமனையிடம் கேட்டார்.ரத்தப் பரிசோதனையின் மூலம், அந்த குழந்தை இருந்த இடமும் கண்டுபிடிக்கப்பட்டது. தவறுதலாக ஒரு மியன்மார் தம்பதியிடம் அந்த குழந்தை தரப்பட்டது.
இதனை மேலும் உறுதிப்படுத்த, டிஎன்ஏ சோதனையும் பின்னர் நடத்தப்பட்டது. அதில் குழந்தை மாறியது உறுதியானது.இந்நிலையில், தவறு நேர்ந்ததை மருத்துவமனை ஒப்புக்கொண்டது. இழப்பீடாக அந்த குடும்பம் வரிசையில் காத்திருக்காமல் சுகாதாரப் பராமரிப்பை உடனே பெறலாம் என்று மருத்துவமனை தெரிவித்தது.
இழப்பீட்டுத் தொகையாகத் தமக்கு 200,000 பாட் (S$7,800) வேண்டும் என்று அந்த தந்தை கேட்டுள்ளார். பாதித் தொகை மியன்மார் தம்பதிக்குத் தரப்படும். இன்னும் இரண்டு வாரங்களில் தொகையைத் தர மருத்துவமனை இசைந்துள்ளது.