கோலாலம்பூர்:
குளோபல் இக்வான் சர்வீஸ், பிஸ்னஸ் ஹோல்டிங்ஸ் (GISBH) இணை உறுப்பினர் முஹமட் ரிஸா மக்கார் மீது இந்த அமைப்புக்கு எதிரான போலீஸ் புகாரை வாபஸ் பெறுமாறு ஒருவரை மிரட்டியதாகக் குற்றம்சாட்டப்பட்டது.
புத்ராஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் அமாட் அஃபிக் ஹசான் முன்னிலையில் குற்றவியல் சட்டம் பிரிவு 506 கீழ் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை அவர் மறுத்தார்.
கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி பிரிசின்ட் 4, கெளரியா Galeria பிஜேஎச் கார் பார்க்கில் இக்குற்றச்செயலை புரிந்ததாக குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டது.
‘நாங்கள் காத்திருக்கிறோம். உன் வீடு எங்கு இருக்கிறது. உன் கணவர், உன் குடும்பம் பற்றி எல்லா விஷயமும் தெரியும் என்று 25 வயது சித்தி நூர் டாலிலா டியானா இஸ்மாயில் என்ற அப்பெண்ணுக்கு மன உளைச்சல் ஏற்படுத்தும் அளவுக்கு மிரட்டியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
குற்றம் நிருபிக்கப்பட்டால் ஏழு ஆண்டுகள் சிறை, அபராதம் அல்லது இரண்டையும் விதிக்கக்கூடிய சட்டப் பிரிவின் கீழ் அவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.
நீதிமன்றம் அவருக்கு 10,000 ரிங்கிட் ஜாமீன் அனுமதித்து, அவரது பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்கும்படி உத்தரவிட்டது.
மாதம் ஒரு முறை போலீஸ் நிலையத்திற்கு வந்து கையொப்பம் இட வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கு அக்டோபர் 18-ஆம் தேதி மீண்டும் விசாரிக்கப்படும்.