சிங்கப்பூர் டாலருக்கு நிகரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு 6% அதிகரிப்பு

கோலாலம்பூர்:

1973ஆம் ஆண்டுக்குப் பிறகு மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு புதிய உயர்வைப் பெற்றுள்ளது.

இந்தக் காலாண்டில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரிங்கிட்டின் மதிப்பு 12 விழுக்காட்டுக்கு மேல் அதிகரித்துள்ளது. அதாவது சந்தையில் சிறப்பாகச் செயல்படும் அனைத்துலக நாணயமாக ரிங்கிட் இருக்கிறது.

சிங்கப்பூர் டாலருக்கு நிகராக அதன் மதிப்பு ஆறு விழுக்காடு கூடியுள்ளது. ஜூன் 28ஆம் தேதி வெள்ளிக்கு 3.4762ஆக இருந்த ரிங்கிட் செப்டம்பர் 20ல் 3.2584 என்று மதிப்பு அதிகரித்தது.

அமெரிக்காவுடனான வரிவிகித வேறுபாடுகள், மேம்பட்டு வரும் வர்த்தகச் செயல்பாடு, அனைவரையும் கவரும் விதமாக உள்ள சொத்து மதிப்பு போன்றவை ரிங்கிட்டின் மதிப்பை மேலும் வலுவடையச் செய்யும் என்று பகுப்பாய்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

வலுவான பொருளியல் வளர்ச்சி மற்றும் அரசாங்கம் எரிபொருளுக்கு வழங்கும் மானியத்தை அகற்றினால், இதர மத்திய வங்கிகள் கடன் வாங்கும் செலவுகளைக் குறைத்தாலும் மலேசிய மத்திய வங்கி, ரிங்கிட்டின் மதிப்பை நல்ல நிலையில் வைத்திருக்க முடியும்.

வெளிநாட்டு முதலீடுகள், வெளிநாட்டு நாணய முதலீடுகள் ரிங்கிட்டின் மதிப்பை மேலும் வலுவடையச் செய்யலாம் என்று சொல்லப்படுகிறது.

“மலேசியாவின் தற்போதைய உபரி, மத்திய வங்கியின் நடுநிலையான அணுகுமுறை, நிலையான அடிப்படைகள் போன்றவை டாலர் பலவீனத்தால் ரிங்கிட்டின் மதிப்பை மேலும் அதிகரிக்க வைக்கும்,” என்று சுமிடோமோ மிட்சுவி பேங்கிங் கார்ப்பரேஷன் ஆசிய வட்டார உத்திபூர்வ தலைவர் ஜெஃப் இங் கூறினார்.

ஏற்றுமதிகள் மீட்சியடைந்து அதிகரித்ததாலும் அரசாங்க அமைப்புகளுடன் தொடர்புடைய நிறுவனங்கள் வெளிநாட்டு முதலீடுகளை கொண்டு வருவதற்கு மத்திய வங்கி எடுத்த முயற்சியாலும் ரிங்கிட்டின் மதிப்பு அதிகரிக்கத் தொடங்கியது. இந்த காலாண்டில் அது உச்சத்தை தொட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here