திருச்சூர்: தமிழக ஆடவர் ஒருவர் கேரள மாநிலத்தில் கடத்திக் கொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
‘ரைஸ் புல்லிங் நிதி’ திட்டத்தில் சாதிக்கை ரூ.10 லட்சம் முதலீடு செய்ய வைத்தார் அருண். பணம் பறிபோனது தெரிந்ததும், திருச்சூர் பளியக்கரா சுங்கச் சாவடி அருகே வருமாறு அருணிடம் கூறினார் சாதிக்.
அதன்படி, அருணும் சசாங்கனும் அங்கு சென்றனர். அவ்விருவரையும் கடத்திச் சென்ற சாதிக் தரப்பினர், அவர்களைக் கைப்பமங்கலத்தில் ஓரிடத்தில் அடைத்துவைத்து சரமாரியாகத் தாக்கினர். அதில் அருண் இறந்துபோக, அவசர மருத்துவ வாகனத்தை அழைத்து, அதில் அவரது உடலைப் போட்டுவிட்டுச் சென்றது சாதிக் தரப்பு.
அருண் சாலை விபத்தில் காயமடைந்துவிட்டதாகவும் அவரை மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லுமாறும் அவசர மருத்துவ வாகன ஓட்டுநரிடம் அக்கும்பல் கூறியது. பின்னாலேயே தாங்கள் காரில் வருவதாகவும் அக்கும்பல் அந்த ஓட்டுநரிடம் சொன்னது.
ஆனால், அவர்கள் தப்பிவிட்டனர். அருண் இறந்துவிட்டதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர். அவர் தலையிலும் மூக்கிலும் கடுமையான காயம் அடைந்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
சசாங்கனிடம் காவல்துறை மேற்கொண்ட விசாரணையை அடுத்து, உண்மை தெரிந்தது. அருணைக் கொன்ற நால்வரையும் பிடிக்க கண்ணூரிலும் கோழிக்கோட்டிலும் காவல்துறை தேடுதலைத் தீவிரப்படுத்தியுள்ளது.