பினாங்கு:
பொது ஆரோக்கிய நலனை முன்னிட்டு அக்டோபர் 1ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் புகையிலை தயாரிப்பு கட்டுப்பாட்டு சட்டம் (சட்டம் 852) மனித உயிர்களை மட்டுமல்ல சுற்றுச்சுழலும் காக்கப்படுவதற்கு வகை செய்யும் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்க கல்வி பிரிவு அதிகாரி என்.வி.சுப்பாராவ் தெரிவித்தார்.
பல ஆண்டுகால காத்திருப்புக்குப் பின்னர் இந்தச் சட்டம் அமலாக்கம் பெறுவதால் பினாங்கு பயனீட்டாளர் சங்கம் மிக அதிகமாகவே இச்சட்ட அமலாக்கத்தை வரவேற்பதாக அவர் குறிப்பிட்டார்.
இந்தச் சட்டம் அமலாக்கம் பெறுவதால் லட்சக் கணக்கான இளம் உயிர்கள் காக்கப்படும். புகைப் பழக்கமோ, வேப் எனப்படும் மின் சிகரெட்டுகளைப் புகைக்கும் பழக்கமோ இறுதியில் போதைப் பொருள் புழக்கத்திற்கு வித்திட்டுவிடும் என்ற அபாயத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்தச் சட்டம் முழுமையாக அமலாக்கப்பட வேண்டும். எச்சரிக்கை அல்லது அபராதம் விதிப்பதோடு நின்றுவிடாமல் கடுமையான நடவடிக்கையும் சம்பந்தப்பட்டவர்கள் மீது எடுக்கப்பட வேண்டியது அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.