471 நாட்களுக்குப் பிறகு செந்தில் பாலாஜிக்கு பிணை

புதுடெல்லி:

ராண்டுக்கு மேல் சிறையில் அடைக்கப்பட்டு, பலமுறை பிணை கேட்டு போராடிய நிலையில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை (செப்டம்பர் 26) பிணை வழங்கியது.

திங்கள், வெள்ளிக்கிழமைகளில் அமலாக்கத் துறை அலுவலகத்திற்குச் சென்று கையெழுத்திட வேண்டும், சாட்சிகளை கலைக்கவோ, சந்தித்துப் பேசவோ கூடாது, விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும், வெளிநாடுகளுக்குச் செல்லக் கூடாது போன்ற சில நிபந்தனைகளுடன் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய செந்தில் பாலாஜியின் வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ, செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராவதற்கு சட்டபூர்வமாக எந்த தடையும் விதிக்கப்படவில்லை என்று குறிப்பிட்டார்.

நீண்ட நாள்களாக சிறையில் இருந்தது, வழக்கை விசாரித்து முடிப்பதற்கு ஏற்படும் காலதாமதம் ஆகிய இரண்டு காரணங்களால் உச்ச நீதிமன்றம் பிணை வழங்க முன்வந்தது என்றும் அவர் தெரிவித்தார்.

செந்தில் பாலாஜிக்கு பிணை வழங்கியதை கேள்விப்பட்ட திமுக தொண்டர்கள் புழல் சிறைக்கு முன்பு கூடி பட்டாசுகளை வெடித்துக் கொண்டாடினர்.

கடந்த 2011 – 2016 அதிமுக ஆட்சிக் காலத்தில் போக்குவரத்து அமைச்சராக பதவி வகித்தவர் செந்தில் பாலாஜி, 48. போக்குவரத்து கழகங்களில் ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட அரசு வேலைகளை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்ததாக அவர் மீது மூன்று குற்ற வழக்குகளை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை பதிவு செய்தது.

இதன் அடிப்படையில் பணப்பரிமாற்ற மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த அமலாக்கத்துறை, செந்தில் பாலாஜியை கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி கைது செய்தது.

அவர் மீது ஏறக்குறைய 3,000 பக்க குற்றப் பத்திரிகையை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12ஆம் தேதி அமலாக்கத்துறை தாக்கல் செய்தது.

ஓராண்டுக்கும் மேலாக சிறையில் இருந்த செந்தில் பாலாஜி பல முறை பிணை கேட்டும் கிடைக்கவில்லை.

இதையடுத்து செந்தில்பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா, அகஸ்டின் ஜார்ஜ் மாஷி அமர்வு விசாரித்தது.

செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோத்தஹி, சித்தார்த் லூத்ரா முன்னிலையாகினர். அமலாக்கத்துறை சார்பில் துஷார் மேத்தா, ஜோஹாப் ஹுசைன் ஆகியோர் முன்னிலையாகி வாதாடினர். இந்த வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

வியாழக்கிழமை (செப்டம்பர் 26) தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் அபய் எஸ் ஓகா, அகஸ்டின் ஜார்ஜ் அமர்வு செந்தில் பாலாஜிக்கு பிணை வழங்க உத்தரவிட்டனர்.

இதற்கிடையே செந்தில் பாலாஜியை ‘வருக’, ‘வருக’ என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வரவேற்றுள்ளார்.

இது குறித்து ‘எக்ஸ்’ பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “ஆருயிர் சகோதரர் செந்தில் பாலாஜிக்கு 471 நாட்களுக்குப் பிறகு, உச்ச நீதிமன்றத்தால் பிணை கிடைத்துள்ளது. அமலாக்கத்துறையானது, அரசியல் எதிரிகளை ஒடுக்கும் துறையாக மாற்றப்பட்ட தற்போதைய சூழலில், அதற்கு உச்ச நீதிமன்றம் ஒன்றே விடியலாக இருக்கிறது. அவசரநிலை காலத்தில்கூட இவ்வளவு நாட்கள் சிறை வாழ்க்கை கிடையாது. அரசியல் சதிச் செயல்கள் 15 மாதங்கள் தொடர்ந்தன. கைது செய்து சிறையிலேயே வைத்துவிடுவதால் சகோதரர் செந்தில் பாலாஜியின் உறுதியைக் குலைக்க நினைத்தார்கள். முன்னிலும் உரம் பெற்றவராய்ச் சிறையில் இருந்து வெளியில் வரும் சகோதரர் செந்தில் பாலாஜியை வருக வருக என வரவேற்கிறேன்,” என்று மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here