ரஜினி சிகிச்சை முன்பே திட்டமிட்டது ; பக்கத்தில் நின்று பார்த்தது போல் பேசுகிறார்கள் : லோகேஷ் கனகராஜ் வருத்தம்

ரஜினி நடித்துள்ள ‛வேட்டையன்’ படம் வரும் அக்., 10ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. அடுத்து அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‛கூலி’ படத்தில் நடித்து வருகிறார்.

இதன் படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் நடந்து வந்தது. திடீர் உடல்நலக் குறைவால் செப்., 30ம் தேதி சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ரஜினி. அவருக்கு அடிவயிற்றுக்கு அருகே ரத்த நாளம் பெரிதாகி வீக்கம் இருந்தது. இதனை சிகிச்சையின்றி ஸ்டன்ட் மூலம் சரி செய்தனர். அவரது உடல்நிலை சீரானதைத் தொடர்ந்து நேற்று(அக்., 4) வீடு திரும்பினார்.

ரஜினியின் உடல்நிலை பிரச்னைக்கு காரணமே கூலி படப்பிடிப்பு தான். படப்பிடிப்பு தளத்தில் அவர் சிரமமான காட்சிகளில் நடித்ததால் தான் அவருக்கு இந்த பிரச்னை வந்தது என பலரும் யுடியூப்பில் பேசி வந்தனர்.

இதுபற்றி சென்னையில் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய லோகேஷ் கனகராஜ், ‛‛கூலி படப்பிடிப்பு 50 சதவீதம் முடிந்துவிட்டது. ரஜினி நன்றாக இருக்கிறார், போனில் அவரிடம் பேசினேன். அவரது உடல்நிலை பற்றி நானே சில விளக்கம் தருகிறேன். விசாகப்பட்டினத்தில் படப்பிடிப்பு துவங்கும் முன் கிட்டத்தட்ட 40 நாட்களுக்கு முன்பே தனது சிகிச்சை பற்றி ரஜினி கூறியிருந்தார். அதற்கு ஏற்றபடி திட்டமிட்டு படப்பிடிப்பு நடத்தி வந்தோம். ஆனால் அவரது உடல்நலப் பிரச்னை பற்றி யு-டியூப் தளத்தில் வேறுமாதிரி செய்தி வெளியானது. ரஜினி உடல்நிலையை மீறி படமா என்றால் நிச்சயம் இல்லை. அவரது உடல் நலம் தான் முக்கியது.

அவருக்கு பாதிப்பு ஏற்பட்டு இருந்தால் இன்று(நேற்று) காலை 5 மணிவரை படப்பிடிப்பு நடத்தி இருக்க மாட்டோம். அனைவரும் மருத்துவமனையில் இருந்திருப்போம். அவரைப்பற்றி ஏதோ பக்கத்தில் இருந்து பார்த்தது போல் பேசுகிறார்கள். இதை பார்க்கையில் வருத்தமாகவும், பதட்டமாகவும் உள்ளது. ஏதாவது எழுதி எல்லோரையும் பதட்டமடையச் செய்யாதீர்கள். ரஜினி தற்போது ஓய்வில் உள்ளார். அக்., 15 முதல் மீண்டும் கூலி படப்பிடிப்பு துவங்கும்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here