ரெம்பாவ் அருகே வடக்கு-தெற்கு விரைவுச்சாலையின் KM223.8 என்ற இடத்தில் தனது அதிவேக பைக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் சிங்கப்பூரர் ஒருவர் உயிரிழந்தார். அதிகாலை 4 மணியளவில் நடந்த இந்த விபத்தில் 21 வயதான மாணவர் முஹம்மது ரசிப் ஹாருன், சிங்கப்பூருக்கு திரும்பிச் சென்று கொண்டிருந்தார். இறந்தவர் கோலாலம்பூரில் ஒரு சிறிய விடுமுறைக்குப் பிறகு வீட்டிற்குச் சென்றதாக நம்பப்படுகிறது என்று ரெம்பாவ் காவல்துறைத்தலைவர் நூர் ஜூலியாட்டி ரசாலி கூறினார். இறந்தவர் ஆயர் கெரோவை நோக்கிச் சென்றபோது விபத்து ஏற்பட்டது.
முதற்கட்ட விசாரணையில், அவர் பைக்கின் கட்டுப்பாட்டை இழந்து, பின் தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது என தெரியவந்துள்ளது. இறந்தவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதாக ஏஎஸ்பி நூர் ஜூலியாட்டி தெரிவித்தார். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ரெம்பாவ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. சாலை போக்குவரத்து சட்டம் 1987ன் பிரிவு 41(1)ன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது என்றார்.