உத்தர பிரதேசத்தில் துர்கை சிலை கரைப்பு ஊர்வலத்தில் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில், இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து நடந்த வன்முறையில் வீடுகள், கடைகள், வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டதால் பதற்றம் நிலவுகிறது.
உத்தர பிரதேசத்தில் துர்கா பூஜையை ஒட்டி பிரதிஷ்டை செய்யப்பட்ட பிரமாண்ட துர்கை சிலைகள் நேற்று முன்தினம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன.
பஹ்ரைச் மாவட்டத்தில் மஹாசி என்ற பகுதியில் சிலைகளை, நேற்று முன்தினம் இரவு ஊர்வலமாக எடுத்துச் சென்ற போது, முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் சத்தமாக ஒலிபெருக்கி இசைப்பட்டதாக புகார் எழுந்தது.
இதைத் தொடர்ந்து இரு சமூகத்தினரிடையே மோதல் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் கற்களால் தாக்கிய சூழலில், கூட்டத்தில் இருந்த சிலர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
போலீசார் தடியடி நடத்தி கலைத்ததை அடுத்து வன்முறை கும்பல் கலைந்து சென்றது.
இந்நிலையில், அப்பகுதியில் நேற்று காலை மீண்டும் வன்முறை வெடித்தது. சாலைகளில் ஊர்வலமாக வந்த மர்ம நபர்கள், வீடுகள், கடைகள், இருசக்கர வாகனங்களுக்கு தீ வைத்தனர்.
அது மட்டுமின்றி அப்பகுதியில் செயல்பட்டு வரும் மருத்துவமனையை அவர்கள் சூறையாடினர். அங்கிருந்த படுக்கைகள், மருத்துவ உபகரணங்கள் ஆகியவற்றை அடித்து நொறுக்கியதுடன், மருத்துவமனைக்கு தீ வைத்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் மர்ம நபர்களை விரட்டியடித்தனர்.
இதையடுத்து, அப்பகுதியில் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. வன்முறையில் ஈடுபட்ட 30க்கும் மேற்பட்டோரை கைது செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.