தொழில்நுட்ப வளர்ச்சி ஒரு பக்கம் இருந்தாலும், அதனால் ஏற்படும் தீமைகளும் அதிகம். அதில் குறிப்பிடக்க ஒன்று சைபர் கிரைம். மக்களை ஏமாற்றி பணம் பறிப்பதில் இருந்து வேண்டாதவர்களை ஆபாசமாக சித்தரித்து வீடியோ வெளியிடுவது வரை பல முறைகேடுகள் நடந்து வருகிறது. இதை ஒழிப்பதற்குத்தான் இந்திய அரசும், மாநில அரசுகளும் போலீஸ் துறையில் சைபர் கிரைம் என்ற பிரிவை தொடங்கி உள்ளது.
சைபர் கிரைம் குற்றங்களை தடுப்பதுடன், இதுகுறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் இந்த துறையின் பணியாகும். இந்த நிலையில் இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையத்தின் தேசிய விளம்பர தூதராக நடிகை ராஷ்மிகா மந்தனாவை நியமித்து உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து ராஷ்மிகா தனது சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது: சைபர் கிரைம் என்பது உலகம் முழுவதும் உள்ள தனிநபர்கள், வர்த்தகர்கள், சமூகங்களை பாதிக்கும் ஆபத்தான மற்றும் பரவலான அச்சுறுத்தலாகும். சைபர் குற்றத்தால் பாதிக்கப்பட்டவர் என்ற முறையில், இது தொடர்பான விழிப்புணர்வையும், இணைய குற்றங்களில் இருந்து மக்கள் தங்களை தற்காத்துக் கொள்ளும் வழிமுறைகளையும் மக்களிடம் கொண்டு சேர்த்து மாற்றத்தை உருவாக்க அர்பணிப்புடன் செயல்படுவேன்.
இந்த இணைய குற்றங்களை தடுக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராடுவது மிகவும் முக்கியம். என்னுடைய டீப் பேக் வீடியோ இணையத்தில் வைரலானது ஒரு சைபர் குற்றம் என்பதை அறிந்தேன். அதன்பிறகு, அதற்கு எதிராக போராடவும், இது தொடர்பான விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தவும் முடிவு செய்தேன். இந்திய அரசாங்கத்திடமிருந்து எனக்கு கிடைத்த ஆதரவுக்கு மகிழ்ச்சி அடைகிறேன். நாம் விழிப்புணர்வுடனும், பாதுகாப்புடனும் இருக்க வேண்டும். என்று கூறியுள்ளார்.