வீட்டைத் தாக்கியதால் வெலவெலத்த நேதன்யாகு.. லெபனான் – காசா மீது சரமாரி தாக்குதல் – 73 பேர் பலி

இஸ்ரேலின் கடற்கரை நகரமான செசாரியாவில் உள்ள பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் இல்லம் மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் நேற்றைய தினம் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டதை இஸ்ரேல் உறுதி செய்த பின்னர் இந்த தாக்குதலானது நடந்துள்ளது. டிரோன்களை இஸ்ரேல் பாதுகாப்பு படை அழித்ததால் சேதம் தவிர்க்கப்பட்டது.

இந்த கொலை முயற்சி குறித்து நேதன்யாகு பேசியதாவது, என்னையும் எனது மனைவியையும் படுகொலை செய்ய ஈரானின் பினாமி ஹிஸ்புல்லா மேற்கொண்ட முயற்சி ஒரு பெரிய தவறு. இது என்னையும், இஸ்ரேல் அரசையும் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்காக எதிரிகளுக்கு எதிரான நமது நியாயமான போரைத் தொடர்வதிலிருந்து தடுக்காது என்று எச்சரித்திருந்தார்.

இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் பாலஸ்தீனத்தின் காசா நகரின் மீதும் லெபனான் தலைநகர் பெய்ரூட் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. வடக்கு காசாவில் உள்ள பெய்ட் லாஹியா பகுதியில் வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் மீது நேற்று இஸ்ரேல் நடத்தியுள்ளது.

இதில் மருத்துவர்கள் உட்பட குறைந்தது 73 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் கடந்த 2 வாரத்தில் மட்டும் 400 பேர் வரை இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக காசா சிவில் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

தொடர்ந்து லெபனானில் பெய்ரூட் மீது தாக்குதல் நடத்தும் இஸ்ரேல் அங்குள்ள மக்களை வெளியேறும்படி உத்தரவிட்டுள்ளது. ஹிஸ்புல்லா ஆயுத்தத் தளங்களையே குறிவைத்ததாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here