வேலின் சிறப்புகளை கூறும் மிகச் சக்தி வாய்ந்த பதிகம் வேல்மாறல்

முருகப் பெருமானின் திருக்கையில் இருக்கும் வேலின் சிறப்புகளை, ஆற்றல்களை எடுத்துக் கூறும் மிகவும் சக்தி வாய்ந்த பதிகம் தான் வேல்மாறல். முருகப் பெருமான் மீது திருப்புகழில் பல ஆயிரம் பாடல்களை பாடிய அருணகிரிநாதர், வேலின் சிறப்புக்களை போற்றி 16 அடிகளில் வேல் வகுப்பு என்ற பதிகத்தை இயற்றினார். இந்த பாடலை வரும் அடிகளை முன்பும் பின்னுமாக மாற்றி போட்டு படிக்கட்டுகள் போல் ஏறி, இறங்கும் முறையில் வள்ளிமலை சச்சிதானந்தம் சுவாமிகள் 64 அடிகள் கொண்டதாக இயற்றியது தான் வேல்மாறல். இதை ஒவ்வொரு முறை படிக்கும் போதும் எனக்காக, என்னுடன் முருகன் இருக்கிறார் என்ற நம்பிக்கை ஏற்படும்.

“திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலைவிருத்தன்என(து) உளத்தில்உறைகருத்தன்மயில் நடத்துகுகன் வேலே”
இந்த வரிகள் 16வது அடியாக வரும்படி அருணகிரிநாதர் வேல் வகுப்பு பாடலை இயற்றினார். ஆனால் இந்த அடி 108 முறை வரும் படி வள்ளிமலை சச்சிதானந்தம் சுவாமிகள் வேல்மாறலை இயற்றினார். இரண்டிற்கும் என்ன வேறுபாடு ? இந்த அடியை 108 முறை எதற்காக சொல்ல வேண்டும்? எதற்காக 64 அடிகளை பாட வேண்டும்? எளிமையாக இருக்கும் 16 அடிகளை மட்டும் பாடினால் என்ன? என்ற கேள்வி பலரின் மனதிலும் உண்டாகும். முருகப் பெருமான் திருத்தணி மலை மீது மட்டுமல்ல என்னுடைய மனம் என்னும் குகையிலும் இருக்கிறார்கள். அந்த குகனை அடைவதற்கு ஞானம் என ஒளி கொண்டு எனக்கு வேல் வழிகாட்டி, என்னை முருகனிடம் அழைத்துச் செல்லும் என்பது தான் இந்த அடியின் பொருள்.

வேல்மாறல் முழு பாடலையும் பாட முடியாதவர்கள் கூட இந்த ஒரே ஒரு அடியை பாடினால் வேல்மாறல் முழுவதையும் படித்த பலன் கிடைக்கும். இதை 108 முறை மீண்டும் மீண்டும் சொல்ல சொல்ல முருகன் நம்முடைய மனதில் குடியேறுவார். முருகனின் அருளால் நம்முடைய வாழ்க்கையில் நிறையும். அதனால் தான் இந்த அடிகளை 108 முறை பாடும் படி வைத்தார் வள்ளிமலை சுவாமிகள். வேல்மாறலை தொடர்ந்து 48 நாட்கள் காலையிலும், மாலையிலும் முருகனின் படத்திற்கு முன்போ அல்லது வேலுக்கு முன்போ விளக்கேற்றி வைத்து படித்து வந்தால் வாழ்க்கையே மாறும். நினைத்தது நடக்கும். முருகனின் அருள் கிடைக்கும் என்பது சான்றோர் வாக்கு.

வேல்மாறல் படித்து முருகனின் அருளை பெற்றவர்கள் எத்தனையோ உண்டு. தற்போதும் பல அற்புதங்கள் நிகழ்த்தி, பலரது வாழ்க்கையில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது இந்த வேல்மாறல். ஆனால் சிலருக்கு வேல்மாறல் படித்தும் எந்த பலனும் கிடைக்கவில்லை என புலம்புவது உண்டு. இதற்கு மூன்று முக்கிய காரணங்கள் சொல்லப்படுகிறது. அதில் முதலாவது காரணம் நம்முடைய கர்மவினை. இந்த கர்மவினை வலிமையானதாக இருந்தால் அவ்வளவு எளிதில் எந்த வழிபாட்டிற்கும் பலன் கிடைக்காது. இரண்டாவது காரணம், எந்த ஒரு மந்திரத்தை சொல்வதோ அல்லது விரதம் இருப்பதாகவோ இருந்தால் முழு நம்பிக்கையுடன் சொல்ல வேண்டும். கடமைக்கு படித்தால் பலன் இருக்காது. மூன்றாவது காரணம், எந்த மந்திரத்தையும் பொறுமையாக சொன்னால் மட்டுமே மந்திரம் சக்தி பெற்று பலன் தரும். அவசரமாக சொல்லும் எந்த மந்திரத்திற்கு பலன் கிடைக்காது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here