கோலாலம்பூர்:
நாட்டில் செயற்பாடுள்ள சுற்றுலாப் பேருந்துகளில் உள்ள கைப்பேசி மின் ஏற்றும் முனைகள் பாதுகாப்பு விதிமுறைகளுக்கு கீழ் வராது என்று போக்குவரத்து அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது.
அண்மையில் 18 வயது இளைஞர் ஒருவர் தனது கைப்பேசிக்கு சுற்றுலாப் பேருந்தில் இருந்த கைப்பேசி மின்ஏற்று முனையத்தை பயன்படுத்தினார். அப்போது அவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
இச்சம்பவம் நவம்பர் 2ஆம் தேதி மாலை 6 மணியளவில் பினாங்கு செண்ட்ரலில் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதைத்தொடர்ந்து சுற்றுலாப் பேருந்தில் உள்ள கைப்பேசி மின் ஏற்றும் முனைகளின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்தது.
இந்நிலையில், இளைஞரின் மரணம் குறித்து விசாரணை நடத்த தனிக்குழு அமைத்துள்ளதா தேசிய வாகன சோதனை மன்றத்தின் தலைவர் முகமட் ரசாக் பாங்மான் தெரிவித்திருந்தார்.
மேலும், மரணம் ஏற்பட்ட பேருந்து சேவைக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன் பாதுகாப்பு தரம் குறித்து சோதனை செய்யவும் எதனால் மின்சார விபத்து ஏற்பட்டது என்பது குறித்தும் விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் சொன்னார்.
எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெறாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படவுள்ளதாகவும் கூறப்பட்டது.
இது குறித்து கவலை தெரிவித்த போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக், மலேசியாவில் வாகன சோதனை வரைவுகள் மீண்டும் மறுபரிசீலனை செய்யப்படும் என்று கூறினார்.
பேருந்துகளில் உள்ள மின்சாரம் தொடர்பான சாதனங்களுக்கான விதிமுறைகள் சிறப்பு குழுவின் விசாரணைக்குப் பிறகு விவாதிக்கப்படும் என்று லோக் தெரிவித்தார்.
சிறப்பு குழு இரண்டு வாரத்தில் விசாரணையை முடித்து தகவல்களை சமர்பிக்கும் என்றும் கூறப்படுகிறது.